தேனி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேனி நகரில் பங்களாமேடு பகுதியில் தேர்தல் பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர், தேனி நாடாளுமன்ற தொகுதியில் தங்க தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றால் தொகுதியில் மாதம் 2 நாட்கள் தங்கி சேவை செய்வேன் என வாக்குறுதி அளித்தார். அத்துடன் திமுக ஆட்சியில் அமல்படுத்தியிருக்கும் நலத்திட்டங்களையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பட்டியலிட்டு வாக்குகளை சேகரித்தார்.
பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, " நேற்று ஆண்டிபட்டியில் தாமதமாக வந்ததால் பத்து மணிக்கு மேலானதால் பிரச்சாரம் மேற்கொள்ள முடியவில்லை. கொளுத்தும் வெயிலில் தேனியில் கூடியுள்ள திமுக மற்றும் கூட்டணி கட்சியினருக்கு நன்றி. வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி உதய சூரியன் சின்னத்தில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை அமோக வெற்றி பெறச்செய்ய வேண்டும். தங்க தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றால் மாதம் இரண்டு நாட்கள் தேனி தொகுதியில் தங்கி சேவை செய்வேன். கடந்தமுறை தேனியில் மட்டும் தோல்வி அடைந்தோம். எதிர்ப்பவர் யாராக இருந்தாலும் நாம் வெற்றிபெற வேண்டும்" என்று கூறினார்.
மேலும் படிக்க | மதிமுக சிட்டிங் எம்.பி., கணேசமூர்த்தி தற்கொலை முயற்சி...? அரசியல் களத்தில் அதிர்ச்சி
தொடர்ந்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், " ஆட்சியில் இருந்த நரேந்திர மோடி பத்து ஆண்டுகளாக என்ன செய்தார்?, மொழி உரிமை உள்ளிட்ட மாநில உரிமைகளை மீட்பதே நமது நோக்கம். முக்கியமா குலக்கல்வி திட்டத்தை நீக்க வேண்டும். தாய்மார்கள் முடிவெடுத்து வாக்களித்தால் வெற்றி நிச்சயம். புதுமைப்பெண் திட்டத்தால் அதிகமான பெண்கள் கல்லூரியில் சேர்ந்து வருகிறார்கள். புதிய கல்விக் கொள்கை திட்டம் ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு குழந்தைக்கு பொதுத்தேர்வு என்கிறார்கள், இது தேவையா?. தமிழ்நாட்டில் நீட் தேர்வை நாம் நுழைய விடவில்லை. ஜெயலலிதாவும் நீட் தேர்வை நுழைய விடவில்லை. ஆனால் அதன் பிறகு அடிமை அதிமுக கூட்டம் நீட் தேர்வை நுழைய விட்டது" என விமர்சித்தார்.
" ஒன்றிய பாஜக அரசுடன் சேர்ந்து அடிமை கூட்டம் நீட் தேர்வை நுழைய விட்டதால் 21 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். சிஏஜி அறிக்கையில் ஒன்பது வருடத்தில் ஏழரை லட்சம் கோடி எங்கு போனது என தெரியவில்லை. சாலை போடுவதில் முறைகேடு, மருத்துவ காப்பீடு திட்டத்தில் முறைகேடு செய்துள்ளது ஒன்றிய பாஜக அரசு. செய்வதை சொல்வோம் சொல்வதை செய்வோம் என கலைஞர் வழியில் வந்தவர்கள் நாம். இந்தியாவில் கோவிட் விழிப்புணர்வால் அதிக ஊசி போட்டது தமிழ்நாட்டு மக்கள் தான். தமிழக முதல்வர் தான் அதற்கு காரணம்." என்றார் உதயநிதி ஸ்டாலின்.
" மகளிருக்கு வாக்குறுதிபடி கட்டணமில்லா பேருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மகளிர் ஒவ்வொருவரும் மாதாமாதம் பணத்தை சேமிக்கிறார்கள். அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கூலித் தொழிலாளியின் குழந்தைகள் காலை உணவு இல்லாமல் இருப்பதை தவிர்க்கவே இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இன்று முதல்வர் இருக்கிறார் என தைரியமாக தாய்மார்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறார்கள். திராவிட மாடல் அரசின் சாதனைகள் இவை. கேஸ் சிலிண்டர் விலை 450 ரூபாயில் இருந்து உயர்ந்து 1100 ரூபாய்க்கு மேல் ஆகிவிட்டது. தற்போது நமது தேர்தல் வாக்குறுதிபடி, ஒரு கேஸ் சிலிண்டர் விலை 500 ரூபாய்க்கு கொடுக்கப்படும்.
ஒரு லிட்டர் பெட்ரோல் 75 ரூபாய்க்கு கொடுக்கப்படும். ஒரு லிட்டர் டீசல் 65 ரூபாய்க்கு கொடுக்கப்படும். சுங்கச்சாவடிகள் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்தும் அகற்றப்படும். முல்லைப் பெரியாறு அணை கட்டிய பென்னிகுக் கிற்கு லண்டனில் சிலை தமிழக அரசு சார்பாக அமைக்கப்பட்டுள்ளது. போடியில் 100 கோடி செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டிபட்டி தொகுதி கடமலைக்குண்டு பகுதியில் 250 கிராம கூட்டு குடிநீர் திட்டத்திற்கு 162 கோடி ரூபாயில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பெரியகுளம் அரசு மருத்துவமனையில் இதய நோய் சிகிச்சை அரங்கு மற்றும் மாவட்ட புற்றுநோய் மையம் அமைக்கப்பட்டுள்ளது. தென்கரை பேரூராட்சியில் கூட்டு குடிநீர்த்திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. முல்லைப் பெரியாறு அணை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்." என பிரச்சாரம் செய்தார் அமைச்சர் உதயநிதி.
வாழை திராட்சை பதப்படுத்தும் நிலையம் அமைக்கப்படும். திண்டுக்கல் சபரிமலை ரயில் பாதை அமைக்கப்படும் என வாக்குறுதி கொடுத்த அமைச்சர் உதயிநிதி ஸ்டாலின், 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். வருகின்ற ஜூன் மூணு கலைஞரின் நூறாவது பிறந்தநாள். அதற்கடுத்த நாலாம் தேதி வாக்கு எண்ணிக்கை. கலைஞருக்கு பிறந்தநாள் பரிசாக 40க்கு 40 தொகுதிகளும் வெற்றி பெறச் செய்ய வேண்டும். உங்களது வீட்டுப் பிள்ளையாக இருந்து கேட்கிறேன். திமுகவை வெற்றி பெறச் செய்யுங்கள். தங்க தமிழ்ச்செல்வனை பாராளுமன்றத்திற்கு அனுப்புங்கள் என வாக்காளர்களிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ