Ramadoss on Reservation: சாதிவாரி கணக்கெடுப்பு காலம் தாழ்த்தும் உத்தி

சாதிவாரி கணக்கெடுப்பு காலம் தாழ்த்தும் உத்தி: தனி இடஒதுக்கீடு உடனே வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் ராமதாசு அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 1, 2020, 09:03 PM IST
  • சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த ஆணையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்
  • சாதிவாரி கணக்கெடுப்பு காலம் தாழ்த்தும் உத்தி
  • வன்னியர் சமுதாய மக்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்- பா.ம.க கோரிக்கை
Ramadoss on Reservation: சாதிவாரி கணக்கெடுப்பு காலம் தாழ்த்தும் உத்தி title=

சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பு காலம் தாழ்த்தும் உத்தி: தனி இடஒதுக்கீடு உடனே வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் ராமதாசு அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை பின்வருமாறு: 

தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் சென்னையில் இன்று மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த ஆணையம் அமைக்கப்படும்  என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார். இது வன்னியர்களின் 20% தனி இட ஒதுக்கீட்டு கோரிக்கையை தாமதப்படுத்துவதற்கான உத்தி ஆகும். இது மனநிறைவு அளிக்கவில்லை.

கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மிகவும் பின்தங்கியுள்ள வன்னியர் சமுதாய மக்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு (Reservation) வழங்க வேண்டும் என்று 40 ஆண்டுகளாக வன்னியர் சங்கமும், கட்சி தொடங்கப்பட்ட நாளில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சியும் போராடி வருகின்றன. ஒவ்வொரு முறையும் வன்னியர்களின்  20% தனி இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை ஆய்வு செய்து நல்ல முடிவு எடுப்பதாக அறிவிக்கும் ஆட்சியாளர்கள், நிறைவில் வன்னிய மக்களை ஏமாற்றுவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர்.

Also Read | வன்னியர் 20% தனி இடஒதுக்கீட்டுப் போராட்டத்தை அனைவரும் ஆதரிக்கவேண்டும்

தமிழ்நாட்டின் தற்போதைய அரசிடம் இந்த கோரிக்கையை இப்போது புதிதாக பாட்டாளி மக்கள் கட்சி எழுப்பவில்லை. கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை அவரது முகாம் அலுவலகத்தில் நானும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்  ஜி.கே. மணி, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரும் சந்தித்து வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். அதன்பின் கடந்த ஓராண்டில் பலமுறை இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளோம்.

கடைசியாக கடந்த 23.10.2020 அன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நான் எழுதிய கடிதத்தில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டியதன் தேவை குறித்து விரிவாக விளக்கியிருந்தேன். அதனடிப்படையில்  வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீட்டை உடனடியாக வழங்கும்படி கோரிக்கை விடுத்திருந்தேன்.

பாட்டாளி மக்கள் கட்சியின் 32-ஆவது ஆண்டு விழாவையொட்டி கடந்த ஜூலை 16-ஆம் தேதி நடைபெற்ற இணையவழி செயற்குழு கூட்டத்திலும், செப்டம்பர்  6-ஆம் தேதி நடைபெற்ற இணைய வழி பொதுக்குழு கூட்டத்திலும் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், அந்தக் கோரிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசிடமிருந்து எந்த பதிலும்  வராத நிலையில் தான் தனி இட ஒதுக்கீட்டு கோரிக்கையை முன்வைத்து மாபெரும் அறவழி போராட்டத்தை  பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையில் வன்னியர் (Vanniyar)  சங்கமும்,  பாட்டாளி மக்கள் கட்சியும் இணைந்து சென்னையில்  இன்று நடத்தின.

அந்தப் போராட்டத்தில் பங்கேற்க தமிழகம் முழுவதிலுமிருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பாட்டாளி சொந்தங்கள் சென்னைக்கு திரண்டு வந்த நிலையில், அவர்களில் 95 விழுக்காட்டினரை காவல்துறையினர் கைது செய்தும், திருப்பி அனுப்பியும் சென்னைக்கு வர விடாமல் செய்து விட்டனர். இந்நடவடிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது. சமூகநீதியில் அக்கறை கொண்ட அரசு இதை செய்யாது.

சென்னையில் நடத்தப்பட்ட போராட்டத்தைத் தொடர்ந்து மருத்துவர் அன்புமணி இராமதாஸ் (Anbumani Ramadoss) மற்றும் போராட்டக் குழுவினரை அழைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்பேச்சுக்களின் போது பாட்டாளி  மக்கள் கட்சி சார்பில் வழங்கப்பட்ட கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட முதலமைச்சர், வன்னியர்களின் 20% தனி இட ஒதுக்கீடு கோரிக்கை குறித்து சாதகமான முடிவை எடுப்பதாக உறுதியளித்திருந்தார். அதனடிப்படையில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்குவதற்கான முதலமைச்சரின் அறிவிப்பு வரும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், ஏமாற்றம் நிறைந்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.

Also Read | வன்னியர் இட ஒதுக்கீடு: டிசம்பர் 1 முதல் TNPSC முன் பெருந்திரள் போராட்டம்!

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, அதன்பிறகு வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்குவதென்பது உடனடியாக சாத்தியமாகும் செயல் இல்லை. வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவதற்கான தந்திரமாகமே தமிழக அரசின் (Tamil Nadu government) நடவடிக்கையை பார்க்க வேண்டியிருக்கிறது.

வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீட்டை உடனடியாக வழங்காமல் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த ஆணையம் அமைப்போம் என்பது இந்த பிரச்சினையை கிடப்பில் போடும் செயலாகும். இதற்கு பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்க போராட்டக் குழுவினரையும் மருத்துவர் அன்புமணி இராமதாசையும் முதலமைச்சர் அழைத்துப் பேசியிருக்கத் தேவையில்லை.  காலம் தாழ்த்துவதற்கான இந்த அறிவிப்பை தன்னிச்சையாகவே வெளியிட்டிருக்கலாம்.

வன்னியர்கள் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் (employment) காலம், காலமாக பின்தங்கியிருக்கின்றனர். அவர்கள் கல்வியும், வேலைவாய்ப்பும் பெற்றால் தான் நூற்றாண்டுகளாக பின்தங்கிக் கிடக்கும் அந்த சமுதாயத்தை  முன்னேற்ற முடியும். அவ்வாறு செய்யாமல் இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட்டு இனியும் அலைக்கழிப்பதும், ஏமாற்றுவதும் எந்த வகையிலும் நியாயமல்ல. வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்குவதற்கு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு கட்டாயமில்லை.

Also Read | மோடியுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்: ஆவலுடன் கூறும் Biden, ஆத்திரப்படும் Xi Jinping

மாறாக, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் உள்ள மக்கள்தொகை விவரங்களின் அடிப்படையிலேயே   இட ஒதுக்கீட்டை வழங்கலாம். கடந்த காலங்களில் இஸ்லாமியர்கள் மற்றும் அருந்ததியர்களுக்கான உள் ஒதுக்கீடுகள் அவ்வாறு தான் வழங்கப்பட்டன. அதேபோல், வன்னியர்களுக்கான 20% தனி இட  ஒதுக்கீட்டையும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அறிக்கையை பெற்றே தமிழக அரசு அறிவிக்கலாம்.

எனவே, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையத்தை அமைப்பது உடனடியாக பயனளிக்காது. மாறாக, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்குவதற்கான ஆணையை உடனடியாக பிறப்பிக்க வேண்டும்; அவர்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.

Also Read | நமது வெற்றியை நாளை போராட்டம் சொல்லும்: PMK

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News