ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் வழக்கை இன்று விசாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் வழக்கை ஒத்தி வைத்தது சுப்ரீம்கோர்ட்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 3, 2019, 01:28 PM IST
ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு title=

சென்னை: 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் வழக்கை இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் வழக்கை ஒத்தி வைத்தது சுப்ரீம்கோர்ட். 

கடந்த பிப்ரவரி 18, 2017 அன்று தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அதிமுக அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி டி.டி.வி. தினகரன் மற்றும் திமுக கொறடா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த உயர்நீதிமன்றம் சபாநாயகருக்கு உத்தரவிட அதிகாரம் இல்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. 

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ஏ.கே. சிக்ரி என்ற நீதிதி தலைமையில் விசாரிக்கப்பட்டு வந்தது. அப்பொழுது நீதிபதி ஏ.கே. சிக்ரி ஓய்வு பெற்றதால், இந்த வழக்கு விசாரணை மேற்கொண்டு விசாரிக்காமலேயே நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டது. சுமார் 2 ஆண்டுகல் ஆகியும், இந்த வழக்கில் இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை. கோடை கால விடுமுறைக்கு பின்பு, நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றம் மீண்டும் செயல்படத் தொடங்கியது. 

இதனையடுத்து, நேற்று திமுக சார்பில் 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதனை ஏற்ற உச்ச நீதிமன்றம், ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்கம் வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும், அதேவேளையில் விரைந்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவித்தார். 

பின்னர் மாலை ஓ.பி.எஸ். உள்பட 11 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் விசாரணை இன்று (ஜூலை 03) நடைபெறும் என்றும், அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வில் விசாரணை நடைபெறும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவித்தது.

இந்தநிலையில், இன்று ஓ.பி.எஸ். உள்பட 11 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் வந்தது. அப்போது ஓ.பி.எஸ். உள்பட 11 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டது நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு.

Trending News