அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம். பணி நியமன ஆணை வழங்கினார் முதல்வர்!

வேதம், நாலாயிர திவ்ய பிரபந்தம், ஆழ்வார் பாசுரங்கள் உள்ளிட்டவற்றில் 6 முதல் 7 ஆண்டு பயிற்சியை நிறைவு செய்த பட்டாச்சார்யர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 14, 2021, 11:36 AM IST
  • 24 அர்ச்சகர்கள் உட்பட 58 பேர்களுக்கு பணி நியமன ஆணை.
  • 6 முதல் 7 ஆண்டு பயிற்சியை நிறைவு செய்த பட்டாச்சார்யர்களுக்கான பணி நியமன ஆணை.
  • கருணாநிதி முதல்வராக இருந்தபோது அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம். பணி நியமன ஆணை வழங்கினார் முதல்வர்! title=

சென்னை: அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ் ஆலய அர்ச்சகர்கள், திருக்கோயில் பணியாளர்கள் உள்ளிட்ட 216 பணியிடங்களுக்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். அர்ச்சகர்களுக்கான பயிற்சி பள்ளியில் படித்த 24 அர்ச்சகர்கள் உட்பட 58 பேர்களுக்கு இந்த பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

சென்னை பசுமை வழிச்சாலை கபாலீசுவரர் திருக்கோயில் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ் மொழியின் பஞ்ச புராணங்கள் என்று போற்றப்படும் தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருப்பல்லாண்டு, திருவிசைப்பாவுடன் வேதப்பாடங்கள், வேத ஆகமங்களை பயின்றவர்களுக்கு சிவாலயங்களில் அர்ச்சகர் ஆவதற்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து வேதம், நாலாயிர திவ்ய பிரபந்தம், ஆழ்வார் பாசுரங்கள் உள்ளிட்டவற்றில் 6 முதல் 7 ஆண்டு பயிற்சியை நிறைவு செய்த பட்டாச்சார்யர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. அம்மன் கோயில்களில் பூசாரிகளாக பணி செய்ய உள்ளோருக்கான பணி ஆணையும் வழங்கப்பட்டது. 

மேலும் கோவிலில் ஓதுபவர்கள், நந்தவன பராமரிப்பாளர்கள், கோயில் காவலர்கள், மாலை கட்டுவோர், அர்ச்சனை சீட்டு விற்பனையாளர்கள் உள்ளிட்டோருக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சாந்தலிங்க மருதாசல அடிகள், குமரகுருபர சுவாமிகள் சிரவை ஆதீனம், ஆன்மிகச் சொற்பொழிவாளர் சுகி.சிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் கலந்துகொண்டு பேசிய பொன்னம்பல அடிகளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலைஞர் கருணாநிதிபோலவே கடவுளை ஏற்றுக் கொள்கிறாரோ இல்லையோ, கடவுளும் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் செயல்படுவதாக புகழாராம் சூட்டினார்.

1970 ஆம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்தபோது அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டது. சட்டம் வந்து 51 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்மூலம் தமிழக வரலாற்றிலே முதன் முறையாக அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை நடைமுறைக்கு வந்தது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News