அணுமின் நிலைய பாதுகாப்பு அம்சங்களில் பலமடங்கு நாம் முன்னேறியுள்ளோம், அறியும் முன்பே அணுக்கழிவு மையம் ஆபத்தானது என்று மக்களை குழப்புவது நியாயமற்றது என தமிழிசை தெரிவித்துள்ளார்!
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரநல்லூர் பகுதியில் இலவச சிறுநீரக பரிசோதனை முகாமை தொடங்கி வைத்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்., "தேர்தலில் தோல்வியுற்றாலும், எனது தொகுதி மக்களுக்கு தேவையானவற்றை செய்ய விரும்புகிறேன். ஆளும் கட்சியை குறை சொல்வதையே வேலையாகக் கொண்டிருக்கும், திமுக, காங்கிரஸ் கட்சிகள் கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்த போது திட்டங்களை செயல்படுத்தவில்லை. தொலைநோக்கு திட்டத்துடன் காங்கிரஸ் - திமுக செயல்பட்டிருந்தாலே குடிநீர் பஞ்சம் வந்திருக்காது.
இருப்பினும் தற்போதுள்ள தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் தமிழகத்தில் குடிநீர் பிரச்சனையை நீக்க வேண்டும். தமிழகத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள நீர்நிலை திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றும்.
இந்தி மொழி விவகாரத்தில் ரயில்வே அதிகாரிகள் செய்தது தவறு. அதே நேரத்தில் மொழியை வைத்து அரசியல் செய்யக் கூடாது" என குறிப்பிட்டு பேசினார்.
தொடர்ந்து கூடங்குளம் அணுசக்தி மையத்தின் அதிகாரியை சந்தித்து பேசிய பின்னர், "அணுக்கழிவு பாதுகாப்பு மையம் அமைக்கப்படுவதற்கு முன்பே அதற்கான விளக்கத்தை அறியும் முன்பே அணுக்கழிவு மையம் ஆபத்தானது என்று மக்களை குழப்பி வருகிறார்கள்.
அணுமின் நிலைய பாதுகாப்பு அம்சங்களில் பலமடங்கு நாம் முன்னேறியுள்ளோம்" என்று பேசியுள்ளார். அறியும் முன்பே அணுக்கழிவு மையம் ஆபத்தானது என்று மக்களை குழப்புவது நியாயமற்றது எனவும் அவர் தெரிவித்தார்.