காவல்துறையினர் மதவெறிபிடித்த சனாதன சங்கி போல நடந்திருப்பதை கண்டிக்கிறோம்: VCK

மதசார்பின்மைக்கெதிராகச் செயல்பட்டுள்ள காவல் அதிகாரியின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டுமென விசிக சார்பில் வலியுறுத்தல்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jan 31, 2022, 12:37 PM IST
காவல்துறையினர் மதவெறிபிடித்த சனாதன சங்கி போல நடந்திருப்பதை கண்டிக்கிறோம்: VCK title=

சென்னை: நேற்று உலகம் முழுவதும் தேசதந்தையான மகாத்மா காந்தியின் 75வது நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. தமிழகத்திலும் சென்னை மெரினா கடற்கரை பகுதியில் இருக்கும் மகாத்மா காந்தியின் திருவுருவச்சிலைக்கு ஆளுநர் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதேபோல தமிழ்நாடு முழுவதும் பல பகுதிகளில் மகாத்மா காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதில் கோயம்புத்தூர் மாவட்டம் சிவானந்தா காலனி பகுதியில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அப்போது, கோட்சேவுக்கு எதிராகவும், இந்து மதவெறிக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டு உறுதிமொழி ஏற்றனர். அப்போது, அங்கிருந்த காவல்துறை துணை அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பரப்பரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக நெட்டிசன்கள் சமூக ஊடகங்களில் தங்கள் கண்டனத்தையும் பதிவு செய்தனர்.

இந்நிலையில், இன்று விடுதலை சிறுத்தை கட்சி நிறுவனர் தொல்.திருமாவளவன், அச்சம்பவம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில் அவர் கூறியதாவது:

காந்தி நினைவு நாளையொட்டி கோவையில் "மக்கள் ஒற்றுமை மேடை" என்னும் அமைப்பின் ஒருங்கிணைப்பில் சனாதன பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்றுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தோழர் ஜி. இராமகிருஷ்ணன் அவர்கள் சொல்லச் சொல்ல மற்றவர்கள் திரும்பச் சொல்லி உறுதிமொழி ஏற்கும் நிகழ்வின்போது திடுமென காவல்துறையினர் அங்கே வந்து அதனைத் தடுத்துள்ளனர். காந்தியைக் கொன்றது கோட்சே என்றும் ஆர்எஸ்எஸ் பயங்கரவாதிகள், இந்து மதவெறியர்கள் என்றும் கூறக் கூடாதென அப்பகுதியைச் சார்ந்த காவல் துணைக் கண்காணிப்பாளரும் வேறு சில காவல் அதிகாரிகளும் தடுத்து வாக்குவாதம் செய்துள்ளனர். இந்த நிகழ்வு மிகுந்த வியப்பையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.

காவல் துறையினர் அவ்வாறு நடந்துகொண்டது ஏனென்று விளங்கவில்லை. காந்தியடிகளைச் சுட்டுக் கொன்ற மதவெறி பயங்கரவாதி நாதுராம் கோட்சே தான் என்பதும், அவன் அதற்காக மரணத் தண்டணைக்குள்ளானான் என்பதும் வரலாற்று உண்மை. இந்த வரலாறு அறியாதவரா அந்த காவல் அதிகாரி? ஏன் கோட்சே பெயரைச் சொல்லக்கூடாது என தடுத்தார்? காந்தியடிகளைக் கோட்சே கொல்லவில்லை என்று நம்புகிறாரா? அல்லது காந்தியடிகள் கொல்லப்படவே இல்லை. வேறு காரணங்களால் இறந்தார் என கருதுகிறாரா? அல்லது அவர் காந்தியைக் கொன்றது சரி என்று  கோட்சேவைக் கொண்டாடும் கும்பலான சனாதனச் சங்கிகளுள் ஒருவரா? அவரும் அவரோடு வந்த அதிகாரிகளும் நடந்துகொண்ட போக்குகள் மற்றும் அணுகுமுறைகள் வன்மையான கண்டனத்துக்குரியது. 

 

ALSO READ | ’கோட்சே’ பெயரை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்த கோவை காவல்துறை

சமூகநீதி அரசின் கீழ் பணியாற்றும் காவல்துறையினர், மதவெறிபிடித்த சனாதனச் சங்கிகளைப்போல நடந்திருப்பதை விசிக சார்பில் மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கிறோம் என்னும் பெயரில் மதம் சார்ந்து செயல்படும் காவல்துறையினரின் இந்தப்போக்குக் கருத்துரிமையைப் பறிக்கும் சனநாயக விரோத அடாவடிப் போக்கு மட்டுமின்றி, மதவாத நடவடிக்கையுமாகும்.

எனவே, மதசார்பின்மைக்கெதிராகச் செயல்பட்டுள்ள காவல் அதிகாரியின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டுமென விசிக சார்பில் வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு விடுதலை சிறுத்தை கட்சி நிறுவனர் தொல்.திருமாவளவன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ALSO READ | ஆளுநர் Vs ஸ்டாலின்: மோதலுக்கு பிறகு முதல் சந்திப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News