தமிழக மாற்றுத் திறனாளி வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிய முதல்வர்

Last Updated : Sep 13, 2017, 06:09 PM IST
தமிழக மாற்றுத் திறனாளி வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிய முதல்வர் title=

கனடா நாட்டில் நடைபெற்ற உயரம் குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பாராட்டி உள்ளார்.

அதைக்குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

கனடா நாட்டில் 4.8.2017 முதல் 13.8.2017 வரை 42 நாடுகள் கலந்துகொண்ட 7-வது உலக அளவிலான உயரம் குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கான குண்டு, வட்டு மற்றும் ஈட்டி எறிதல் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த திரு மு. கணேசன், திரு. ஊ. மனோஜ் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திரு. ஹ.செல்வராஜ் ஆகிய மூன்று நபர்கள் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் வென்று, இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் உலக அளவில் பெருமையை சேர்த்துள்ளார்கள் என்ற செய்தியை அறிந்து நான் மகிழ்ச்சி அடைந்தேன்.

இந்த 7-வது உலக அளவிலான உயரம் குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில், இந்தியாவைச் சேர்ந்தமாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் 36 பதக்கங்களை வென்றுள்ளனர்.

இதில் குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு மு. கணேசன், நிலை-3 பிரிவில்ஈட்டி எறிதல், குண்டு எறிதல் மற்றும் வட்டு எறிதல் போட்டிகளில் தலா 1 தங்கபதக்கம் வீதம் மூன்று தங்க பதக்கங்கள், திரு. ஊ. மனோஜ், நிலை-2 பிரிவில் ஈட்டி எறிதலில் 1 தங்க பதக்கம் மற்றும் குண்டு எறிதல், வட்டு எறிதல்
போட்டிகளில் தலா 1 வெள்ளி பதக்கம் வீதம் 2 வெள்ளி பதக்கங்கள் மற்றும் திரு. ஹ.செல்வராஜ், நிலை -1 பிரிவில் ஈட்டி எறிதலில் 1 தங்க பதக்கம் என மொத்தம் 7 பதக்கங்களை வென்று சாதனை புரிந்துள்ளனர்.

புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் இந்த அரசு விளையாட்டு வீரர்களை எப்பொழுதும் ஊக்கப்படுத்தும் விதமாக செயல்படும் என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த வீரர்களின் சாதனைகளைப் பாராட்டி, அவர்கள் மென்மேலும் பலசாதனைகள் புரிய, தங்க பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.5.00 லட்சம், வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ 3.00 லட்சம், வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ 2.00 லட்சம் உயரிய ஊக்கத் தொகை வழங்கவும் மேற்கண்ட விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர்களுக்கு விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய ஊக்கத் தொகையில், 15 சதவீதம் ஊக்கத் தொகை வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். 

இதனடிப்படையில், 3 தங்க பதக்கம் வென்ற திரு மு. கணேசன் அவர்களுக்கு ரூபாய் 15 லட்சம், 1 தங்கம் மற்றும் 2 வெள்ளி பதக்கங்கள் வென்ற திரு. ஊ. மனோஜ் அவர்களுக்கு ரூபாய் 11 லட்சம் மற்றும் 1 தங்கம் வென்ற திரு ஹ.செல்வராஜ் அவர்களுக்கு ரூபாய் 5 லட்சம் என மொத்தம் ரூபாய் 31 லட்சம் உயரிய ஊக்கத் தொகையும் இவர்களின் பயிற்சியாளர்கள் திரு. ரஞ்சித் குமார் அவர்களுக்கு ரூபாய் 3.90 லட்சம் மற்றும் திரு சுந்தர் அவர்களுக்கு ரூபாய் 75 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இந்த விளையாட்டு வீரர்களுக்கும் அவர்களது பயிற்சியாளர்களுக்கும் எனது வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்கள் எதிர்காலத்தில் மேன்மேலும், பல சாதனைகள் படைத்து இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமைகள் சேர்க்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Trending News