அரசு கொடுத்த குட் நியூஸ் - ஜூலை மாதம் ரேஷனில் பொருள் வாங்கலையா... கவலை வேண்டாம்!

Ration Shop News: கடந்த ஜூலை மாதம் ரேஷன் கடைகளில் உணவுப் பொருள்களை வாங்காவிட்டால், ஜுலை மாத உணவுப் பொருள்களை இந்த ஆகஸ்ட் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Aug 1, 2024, 07:27 PM IST
  • சந்தை விலையை விட குறைவாக மானிய விலையில் ரேஷனில் வழங்கப்படும்.
  • ரேஷன் பொருள்களை பாக்கெட்டில் வழங்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
  • துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவையும் வழங்கப்படுகிறது.
அரசு கொடுத்த குட் நியூஸ் - ஜூலை மாதம் ரேஷனில் பொருள் வாங்கலையா... கவலை வேண்டாம்! title=

Tamil Nadu Ration Shop News Updates: பொது விநியோக திட்டத்தை மிக வெற்றிகரமாக செயல்படுத்திய மாநிலங்களில் தமிழ்நாடும் முக்கியமான ஒன்றாகும். தமிழ்நாட்டில் வறுமை ஒழிப்பு, பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றில் பொது விநியோக திட்டமும் முக்கிய பங்கை வகிக்கிறது என்கிறார்கள் வல்லுநர்கள்.  

இந்தியாவின் இந்த பொது விநியோக திட்டம் என்பதே குடிமக்கள் யாரும் உணவுத் தட்டப்பாட்டால் பாதிக்கப்படக்கூடாது என்பதை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது எனலாம். மானிய விலையில் உணவுப் பொருள்களை விநியோகிப்பதாகும். மேலும், இந்த பொது விநியோக திட்டத்தை பல மாநிலங்கள் வெறும் ஏழை குடும்பங்களை நோக்கி மட்டும் செயல்படுத்திய நிலையில், தமிழ்நாடு இதனை பரந்தளவிற்கு செயல்படுத்தியது.

கரோனா காலத்தில் கைக்கொடுத்த ரேஷன் கடைகள்

மேலும் பொது விநியோக திட்டத்தின் மூலம் பொங்கல் தொகுப்பு உடன் வேட்டிச் சேலை வழங்குவது, மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி, தொலைக்காட்சி ஆகியவற்றை மக்களிடையே தமிழ்நாடு அரசு கடந்த காலங்களில் சேர்த்தது. கரோனா காலத்திலும் மக்களுக்கு உணவுப்பொருளை வழங்குவதற்கு இந்த பொது விநியோக திட்டமே கைக்கொடுத்தது எனலாம். வருங்காலங்களிலும் மானிய விலையில் மக்களுக்காக அரசால் வழங்கப்படும் இந்த முறை தொடர வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.  

அந்த வகையில், தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தின் கீழ் நியாய விலைக்கடைகளில் அரிசி, சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் ரேசன் அட்டைத்தாரர்களிடம் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் இந்த உணவு பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 

மேலும் படிக்க | கிசுகிசு : கேபினட்டில் மாறும் முக்கிய தலைகளின் துறைகள்..! நம்பர் 2க்கான அறிவிப்பு ரெடி

தமிழ்நாடு அரசின் நற்செய்தி...!

அதன்படி ரேஷனில் அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. பாமாயில் ஒரு பாக்கெட் 25 ரூபாய்க்கும், துவரம் பருப்பு 30 ரூபாய்க்கும் ரேசன் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், துவரம் பருப்பு மற்றும் பாமாயில் கடந்த ஜுலை மாதத்தில் பெறாத ரேசன் அட்டைதாரர்கள் ஆகஸ்ட் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜுன் மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற இயலாத குடும்ப அட்டைதாரர்கள், ஜுன் மாத துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டினை ஜுலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என சட்டமன்றத்தில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்தார். அதன் அடிப்படையில் ஜுன் மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற முடியாதவர்கள் வசதிக்காக ஜுலை மாதத்தில் நியாய விலைக் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற்றுக் கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டது. 

இருப்பினும், ஜுலை மாதத்தில் சிறப்பு பொது விநியோகத்திட்டப் பொருட்கள் முழுமையாக நகர்வு செய்யப்படாத காரணத்தினால் குடும்ப அட்டைதாரர்களால் ஜுலை மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் முழுமையாக பெற இயலவில்லை. ஆதலால், குடும்ப அட்டைதாரர்களின் நன்மையினைக் கருத்தில் கொண்டு ஜுலை மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட் பெற இயலாத அட்டைதாரர்கள் அவர்களுக்கான ஜுலை மாத துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டினை ஆகஸ்ட் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது.

ரேஷன் பொருள்கள் பாக்கெட்டில் விற்பனை

அதேபோல், நீண்ட காலமாக ரேஷன் பொருட்கள் பொதுமக்களுக்கு எடை குறைவாக வழங்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அதனை சரிசெய்யும் வகையில், ரேஷன் பொருட்கள் ஏற்கெனவே எடை சரிபார்க்கப்பட்டு பாக்கெட் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, முதற்கட்டமாக சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு ரேஷன் கடையில் மட்டும் தற்போது ரேஷன் பொருட்கள் பாக்கெட் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதனை மேலும் அதிகரிக்கும் வகையில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும், ஒவ்வொரு தொகுதியில் தலா ஒரு ரேஷன் கடை என தேர்வு செய்யப்பட்டு சோதனை அடிப்படையில் ரேஷன் பொருட்கள் பாக்கெட் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்களிடம் இருந்து கிடைக்கப்பெறும் வரவேற்பை பொருத்து அனைத்து ரேஷன் கடைகளிலும் திட்டத்தை விரிவுப்படுத்த உணவுப்பொருள் வழங்கல் துறை திட்டமிட்டுள்ளது.

மேலும் படிக்க | ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News