ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை: இந்தியா-கொரியா ஆட்டம் 1-1 கணக்கில் சமன்
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கிப் போட்டியில் நேற்று நடைபெற்ற போட்டி டிராவில் முடிந்தது.
ஐந்தாவது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கிப் போட்டி கொரியாவில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இறுதிச்சுற்றுக்கு முன்னேறி உள்ள இந்திய மகளிர் ஹாக்கி அணி நேற்று நடைபெற்ற ரவுண்ட் ராபின் ஆட்டத்தில் கொரியா அணியுடன் மோதியது. முதல் பத்தியில் இரு அணிகளும் கோல்கள் அடிக்கவில்லை. இரண்டாம் பாதியில் கொரியா அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட கொரியா அணியின் வீராங்கனை சியுல் கி சியான் (Seul Ki Cheon) கோல் அடித்தார். இந்த கோல் மூலம் கொரியா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
பின்னர் சில நிமிடங்களில் இந்தியாவுக்கும் பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட இந்திய அணியின் வீராங்கனை லால்ரேம்சியாமி (Lalremsiami) கோல் அடித்தார். இந்த கோல் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தின் 54 நிமிடத்தில் கொரியா அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்த கோலை இந்திய அணியின் கோல்கீப்பர் ஸ்வாதி அருமையாக தடுத்தார். பின்னர் இரு அணிகளும் தங்களது தீவிர தாக்குதல் ஆட்டத்தை வெளிபடுத்தினர் என்றாலும், கோல் அடிக்க முடியவில்லை.
இதனால் இந்தியா - கொரியா அணிகள் இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. நடப்புச் சாம்பியனான இந்தியா, ஏற்கனவே நடைபெற்ற ஆட்டங்களில் ஜப்பானை 4-1 என்ற கணக்கிலும், சீனாவை 3-1 என்ற கணக்கிலும், மலேசியாவை 3-2 என்ற கணக்கிலும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை 21 ஆம் தேதி நடைபெறும் இறுதிச்சுற்று போட்டியில் கொரியாவை எதிர்க்கொள்கிறது இந்தியா.