ரூபாய் நோட்டுகளின் அளவை எதிர்காலத்தில் மாற்றியமைக்கும் எண்ணம் இல்லை என மும்பை உயர்நீதிமன்றத்தில், இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தலைமை நீதிபதி பிரதீப் நந்த்ராஜோக் மற்றும் நீதிபதி பாரதி டாங்க்ரே ஆகியோரின் உயர்நீதிமன்ற அமர்வு கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக வங்கி ஒழுங்குமுறையை பிரதிநிதித்துவப்படுத்திய மூத்த வழக்கறிஞர் வி.ஆர்.தோண்ட் இந்த அறிக்கையை வெளியிட்டார்.


முன்னதாக பார்வையற்றோருக்கான தேசிய சங்கம் (NAB) சார்பில் மும்பை உய்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு (PIL) ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில் ‘புதிய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை அடையாளம் காண்பதில் பார்வையற்றோர் சிரமங்களை எதிர்கொள்கின்றனர், பார்வைக் குறைபாடுள்ளவர்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில் ரூபாய் நோட்டு மற்றும் நாணயங்களில் தனித்துவமான அம்சங்களைச் சேர்க்குமாறு’ மனுதாரர் அமைப்பு ரிசர்வ் வங்கிக்கு வழிகாட்டுதல்களைக் கோரியது. இந்த மனுவினை நீதிபதி பிரதீப் நந்த்ராஜோக் மற்றும் நீதிபதி பாரதி டாங்க்ரே ஆகியோரின் உயர்நீதிமன்ற அமர்வு விசாரித்தது. தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தது.


இதனைத்தொடர்ந்து வங்கி ஒழுங்குமுறையை பிரதிநிதித்துவப்படுத்திய மூத்த வழக்கறிஞர் வி.ஆர்.தோண்ட் இந்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். தோண்ட் தாக்கல் செய்த அறிக்கையை ஆராய்ந்த நீதிபதிகள் அமர்வு., ரூபாய் நோட்டுகளின் அளவைத் தக்கவைத்துக்கொள்வது, பார்வைக் குறைபாடுள்ள நபர்களுக்கு ரூபாய் நோட்டுகளை அடையாளம் காண உதவும் என்று தெரிவித்தது.


இதனிடையே., ‘நாணயம், ரூபாய் நோட்டுகளின் மதிப்பை அடையாளம் காண பார்வை குறைபாடுள்ளவர்களுக்கு உதவுவதற்காக ரிசர்வ் வங்கியால் உருவாக்கப்பட்டு வரும் மொபைல் பயன்பாட்டின் பீட்டா (சோதனை) பதிப்பு நவம்பர் 1-ஆம் தேதி கிடைக்கும்’ என்று தோண்ட் சுட்டிக்காட்டினார். இதன் பின்னர், வழக்கின் விசாரணையை வரும் நவம்பர் 4-ஆம் தேதிக்கு நீதிபதிகள் அமர்வு ஒத்திவைத்தது.