லித்தியம் சுரங்கம்: ஜம்மு காஷ்மீரை சூழப்போகும் ராணுவ மற்றும் சூழலியல் பேராபத்துகள்
ஜம்மு காஷ்மீரில் லித்தியம் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது ஆட்டோமொபைல் துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என யூகிக்கப்பட்டாலும், ராணுவம் மற்றும் சூழலியல் உள்ளிட்ட பேராபத்துகள் பெரும் சவாலாக இருக்கின்றன.
இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் 5.9 மில்லியன் டன் லித்தியம் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மின்சார வாகனங்கள் தயாரிப்பை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்தியாவின் ஆட்டோமொபைல் துறைக்கு இந்த லித்தியம் இருப்பு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது. அதேநேரத்தில் இதனைச் சுற்றியிருக்கும் மிகப்பெரிய ஆபத்துகளையும் இந்தியா உற்றுநோக்க வேண்டியுள்ளது. ஜம்மு காஷ்மீர் என்பது உலகிலேயே தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருக்கும் பகுதியாக இருக்கிறது. இங்கு இந்தியா ராணுவம் முழு கண்காணிப்பில் இருக்கிறது.
மேலும் படிக்க | ஒடிசாவில் ’தங்க புதையல்’..! லித்தியத்தை தொடர்ந்து இந்தியாவுக்கு அடுத்த ஜாக்பாட்
பாகிஸ்தான் மற்றும் சீனாவின் ராணுவ தளவாட பகுதிகளுக்கு மிக அருகாமையில் இருக்கும் பகுதியாகவும் உள்ளது. ஏற்கனவே சீனா ஒருபுறம் அத்துமீறலில் ஈடுபட்டு வரும் சூழலில், இப்போது லித்திய சுரங்கம் அங்கு அமைப்பது அவ்வளவு பாதுகாப்பானதாக இருக்காது என்ற குரல்கள் எழுந்துள்ளன. சுரங்கப் பகுதிகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாக வாய்ப்பு இருப்பது மட்டுமல்லாமல், தீவிரவாதிகள் ஊடுருவலுக்கு மிகப்பெரிய வாய்ப்பாகவும் இந்த லித்திய சுரங்க போக்குவரத்து அமைந்துவிடும். அதுமட்டுமல்லாது, சுரங்க பகுதிகளுக்குள் தீவிரவாத தாக்குதல்கள் நடந்தால் அது மிகப்பெரிய பேராபத்துக்கு இந்தியாவை கொண்டு நிறுத்தவும் வாய்ப்பு இருக்கிறது.
இவ்வளவு அதி முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் லித்தியம் சுரங்கம் அமைப்பது அவ்வளவு சரியான முடிவாக இருக்காது என்ற கருத்து பரவலாக இருக்கிறது. மேலும், அரசு செய்வது அல்லாமல் தனியார் அந்த இடத்தில் சுரங்கப் பணிகளை மேற்கொண்டால் இந்த ஆபத்து இன்னும் இரட்டிப்பாக வாய்ப்புகள் உள்ளது. ஏற்கனவே லித்தியம் சுரங்கம் ஜம்மு காஷ்மீரில் அமைக்க தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் சிறப்புச் சட்டம் ரத்து செய்யப்பட்டு இன்னும் அங்கு முழுமையான அமைதி திரும்பாத நிலையில், அங்கு சுரங்க உள்ளிட்ட பணிகள் தொடங்குவது அம்மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. அப்படி சுரங்க பணிகளை தொடங்கினால் உள்ளூர் மக்களுக்கான வாழ்வாதாரம், குடியிருப்பு கட்டமைப்புகள், உள்ளூர் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் ஆகியவற்றை ஏற்படுத்தி கொடுக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது. இது மற்றொரு சவால் என்றால், இயற்கை மற்றும் சூழலியல் பேராபத்தும் இருக்கிறது.
ஜம்மு காஷ்மீர் போன்ற இயற்கை வளம் மிக்க பகுதியில் லித்தியம் சுரங்கப் பணிகள் தொடங்கினால், அது அப்பகுதிக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவின் காலநிலையிலும் மிகப்பெரிய தாக்கம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. இதனை இந்தியா எப்படி எதிர்கொள்ளும் என்ற சவால் இன்னொரு பக்கம் இருக்கிறது. இதுமட்டுமல்லாம் லித்தியம் பிரித்தெடுப்பு உள்ளிட்ட பிந்தைய நடைமுறை சிக்கல்களும் இருக்கின்றன. இதுகுறித்து விரிவான ஆய்வுகள் அனைத்து கோணங்களிலும் நடத்தப்படாமல், எத்தகைய முடிவுகள் எடுத்தாலும் அது இந்தியா என்ற ஒட்டுமொத்த நாட்டுக்கும் பேராபத்தை ஏற்படுத்திவிடும்.
மேலும் படிக்க | Lithium: 3000 பில்லியன் லித்தியம் புதையல்: ஏலம் எடுக்க ஒரே ஒரு நிபந்தனை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ