காவிரி நதிநீர் பங்கீட்டில் தொடர்ந்து இன்னல்களை சந்தித்து வரும் தமிழகம், தங்கள் உரிமைக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காவிரி பிரச்சணைக்கு தீர்வு காண, ஜல்லிக்கட்டு போராட்டத்தினை போல் மீண்டும் இளைஞர்கள் ஒன்றுகூடி தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ கட்சி தலைவர்களும் ஒன்றுகூடி இளைஞர்களுக்கு தங்களது ஆதரவினை வழங்கி வருகின்றனர். 


முன்னதாக நேற்று காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டம் திமுக தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் வரும் 5-ம் தேதி மாநிலம் தழுவிய பொது வேலை நிறுத்தம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. மேலும் இன்று விவசாயிகள் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.


இதை தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் மத்திய அரசை கண்டித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்டது. இவ்வழக்கு வரும் 9-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் தமிழகத்தில் போராட்டம் வலுத்துள்ளது. அ.தி.மு.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.


இதை தொடர்ந்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா அறிவித்திருந்தார். அதன்படி இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. 


வணிகர் சங்க பேரமைப்பில் அங்கம் வகிக்கும் கடைகள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. காலை 6 மணிக்கு தொடங்கிய இப்போராட்டம் மாலை 6 மணி வரை நடைபெறும். 


வணிகர் சங்க பேரமைப்பின் முழு அடைப்பு போராட்டத்திற்கு பால் முகவர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. மருந்து மற்றும் மருந்து வணிகர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.