குட்கா ஊழல் தொடர்பான வழக்கினை சிபிஐ விசாரணைக்கு மாற்ற சென்னை உயரநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளாக தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்ய அனுமதித்தது தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து வந்தது.


இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அமர்வில் கடந்த ஜனவரி 30-ம் தேதி மீண்டும் விசாரனைக்கு வந்தபோது தமிழக அரசு, மாநில உணவு பாதுகாப்பு ஆணையர், மனுதாரர் அன்பழகன் தரப்பில் எழுத்துப் பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் வழக்கை ஏப்ரல் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. ஆனால், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை என தமிழக அரசின் ஊழல் கண்காணிப்பு ஆணையம் கூறியது.


இந்நிலையில், கடந்த மாதம் 26-ஆம் தேதி குட்கா ஊழல் விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. 


இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கடந்த வாரம் தமிழக சுகாதாரத்துறை அலுவலர் சிவக்குமார் மேல்முறையீடு செய்திருந்தார். இந்நிலையில் குட்கா விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி டெல்லி சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.


தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் முதல் தகவல் அறிக்கையினை ஏற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத மத்திய, மாநில அரசு அதிகாரிகள், தனி நபர்கள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து விரைவில் சிபிஐ விசாரணையை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.