நிறை புத்தரிசி பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 6-ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நிறை புத்தரிசி பூஜை நடத்தப்படுவது வழக்கம். நாட்டில் வறட்சி நீங்கி விவசாயம் செழிக்கவும், வீடுகளில் செல்வம் கொழிக்கவும் இந்த பூஜை நடத்தப்படுகிறது. 
இந்நிலையில் இந்த ஆண்டிற்கான நிறை புத்தரிசி பூஜை வரும் 7-ஆம் தேதி நடக்கிறது. இதையொட்டி 6-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.


7-ஆம் தேதி காலை 5.45 முதல் 6.15 மணிக்கு இடையே நிறை புத்தரிசி பூஜை நடைபெறும். பூஜைக்கு பின்னர் பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்படும். இந்த நெற்கதிர்களை வீட்டில் வைத்தால் செல்வம் கொழிக்கும் என்பது ஐதீகம். வழக்கமான பூஜைகளுக்கு பின்னர் பிற்பகல் 1 மணிக்கு நடை அடைக்கப்படும்.


பின்னர் மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு தீபாராதனை, படிபூஜை, புஷ்பாபிஷேகம் நடக்கிறது. இரவு 10 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும். 


இதனையடுத்து ஆவணி மாத பூஜைகளுக்காக வரும் 16-ஆம் தேதி மாலை நடை திறக்கப்படும். கடந்த ஆண்டு இதே நிறை புத்தரிசி பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டபோதுதான் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வழக்கமாக நிறை புத்தரிசி பூஜைகளுக்காக பாலக்காடு மற்றும் அத்தன்கோடு ஆகிய இடங்களில் இருந்து நெற்கதிர்கள் கொண்டு செல்லப்படுகிறது.


ஆனால் கடந்த ஆண்டு இந்த நெற்கதிர்களை கொண்டு செல்ல முடியாத அளவுக்கு பம்பையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடந்த ஆண்டு வெள்ளப்பெருக்கால் தந்திரியால் பம்பை ஆற்றை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து தந்திரி புல்மேடு வழியாக சந்நிதானம் சென்று நிறை புத்தரிசி பூஜை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.