தமிழகத்தில் 54 அரசுப் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி இல்லை; தமிழ் வாழ்க: ராமதாஸ் காட்டம்
தமிழ்நாட்டில் 54 அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி இல்லை என்றும், முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் மட்டும்தான் கல்வி பயிற்றுவிக்கப்படுவதாகவும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டிருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழக அரசுப் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி இல்லை என்பதை விட பெரிய தலைகுனிவு தமிழர்களுக்கு இருக்க முடியாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் ஆங்கிலத்தை மட்டுமே பயிற்று மொழியாகக் கொண்ட அரசுப் பள்ளிகள் உள்ளனவா? என்று பள்ளிக் கல்வித்துறையிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி வினா எழுப்பப்பட்டது. அதற்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் அளிக்கப்பட்ட பதிலில், சென்னை, செங்கல்பட்டு, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பூர், கடலூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் 54 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலம் மட்டுமே பயிற்று மொழியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியிடமிருந்து தமிழைக் காப்பாற்றுவதற்காக அடுக்கடுக்கான போராட்டங்களை நடத்தி, ஏராளமான உயிர்களைத் தியாகம் செய்த தமிழ்நாட்டில் தமிழக அரசு நடத்தும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி இல்லை என்பதை நினைக்கவே கவலையாக உள்ளது; இத்தகைய நிலையை ஏற்படுத்தியது அரசுதான் என்பது வேதனை அளிக்கிறது.
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி இல்லாதது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அதற்கு அவர் அளித்த விளக்கம் விசித்திரமாக உள்ளது. ‘‘54 அரசுப் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி இல்லை என்பது தவறு; தமிழ் வழி வகுப்புகளை ஒரு மாணவர் கூட தேர்ந்தெடுக்கவில்லை; அனைத்து மாணவர்களும் ஆங்கில வழி வகுப்புகளில் சேர்ந்துள்ளனர் என்பதுதான் சரி’’ என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கூறியிருக்கிறார். இது தமிழக அரசின் தவறை முற்றிலுமாக மறைத்துவிட்டு, மாணவர்கள் மீது பழி போடும் செயலாகும்.
தமிழக அரசு நடத்தும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி தான் முதன்மையானதாக இருந்திருக்க வேண்டும். தமிழக அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி எதற்கு? அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியைத் தொடங்குவது குறித்து 1937ஆம் ஆண்டில் இருந்தே விவாதங்கள் நடந்து வருகின்றன. 1959ஆம் ஆண்டிலும், 1962ஆம் ஆண்டிலும் அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி தொடங்கப்பட்டன. ஆனாலும், அவற்றின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது. 1970ஆம் ஆண்டுகளின் இறுதியில் ஆங்கில வழி தனியார் பள்ளிகள் அதிக எண்ணிக்கையில் தொடங்கப்பட்ட பின்னர், அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி என்பது கிட்டத்தட்ட இல்லை என்ற உன்னதமான நிலை உருவாக்கப்பட்டிருந்தது.
1999ஆம் ஆண்டு நிலவரப்படி தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக இருந்த 41,317 அரசுப் பள்ளிகளிலும் தமிழ் மட்டும்தான் பயிற்றுமொழியாக இருந்தது. அப்போது தனியார் பள்ளிகளிலும் கூட 2187 மெட்ரிக் பள்ளிகள், 194 சி.பி.எஸ்.இ பள்ளிகள், 41 ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் என 2,422 தனியார் பள்ளிகளில் மட்டும்தான் ஆங்கில வழிக் கல்வி நடைமுறையில் இருந்தது. அதையும் தடை செய்து முதற்கட்டமாக ஐந்தாம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியைக் கட்டாயமாக்க வேண்டும் என வலியுறுத்தி 1999ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி சென்னையில் 102 தமிழறிஞர்கள் சாகும் வரை உண்ணாநிலையைத் தொடங்கினர். ஆனால், அதன்பின் தனியார் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியைக் கட்டாயமாக்குவதற்கு பதிலாக, அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி திணிக்கப்பட்டதுதான் இந்த நிலைக்குக் காரணமாகும்.
2006-11 திமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி வலிந்து திணிக்கப் பட்டது. அதன்பின் வந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி முறை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதனால், அரசுப் பள்ளிகள் உட்பட 50000-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆங்கிலம்தான் பயிற்று மொழியாக இருக்கிறது. அதையும் கடந்து தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்விக்கு இடமில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதை ஏற்க முடியாது.
அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி தொடங்கப்பட்ட போதெல்லாம், அதற்காக அரசுத் தரப்பில் சொல்லப்பட்ட காரணம், ஆங்கில வழிக் கல்வியை மாணவர்களும், பெற்றோரும் விரும்புகிறார்கள் என்பது தான். அறியாதவர்கள் கேட்கிறார்கள் என்பதற்காக மருந்துக்கு பதிலாக நஞ்சைப் புகட்ட முடியாது என்பதைப் போல, மாணவர்கள் கேட்கிறார்கள் என்பதற்காக தரமான தமிழ்வழிக் கல்வியை வழங்குவதற்கு பதிலாக அரைகுறை ஆங்கில வழிக் கல்வியைத் தமிழக அரசு வழங்கியிருக்கக் கூடாது; அது தவறு.
1970ஆம் ஆண்டில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அறிவியல் படிப்புகளைத் தமிழ் மொழியில் நடத்த அப்போதைய கலைஞர் அரசு ஆணையிட்டது. ஆனால், தமிழ் வழியில் படித்தால் வேலை கிடைக்காது என்று கூறி சில அமைப்புகள் போராட்டம் நடத்தியதால், அந்த முடிவைக் கலைஞர் அரசு திரும்பப் பெற்றது. அதனால், அறிவியல் சொற்களைத் தமிழில் உருவாக்க முடியாமல் போய்விட்டது என்று 1975ஆம் ஆண்டில் சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றும்போது கலைஞர் வேதனை தெரிவித்தார். பள்ளிக் கல்வியிலும் அத்தகைய நிலை ஏற்படுவதற்கு தமிழக அரசு வழிவகுக்கக் கூடாது.
தாய்மொழிவழிக் கல்வி எதற்கும் குறைந்ததல்ல. சீனா, ஜப்பான், கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட உலகில் அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் வளர்ச்சியடைந்த நாடுகளில் தாய்மொழியில் தான் கல்வி கற்பிக்கப்படுகிறது. இந்த உண்மையை மக்களுக்கு உணர்த்தி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியைக் கட்டாயமாக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்''.
இவ்வாறு பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR