தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு 80% இட ஒதுக்கீடு; மே 1 முதல் முழு மதுவிலக்கு: பாமக நிழல் பட்ஜெட்டின் அசத்தலான 52 அம்சங்கள்

பாமகவின் நிழல் பொது பட்ஜெட் எப்போதும் கவன ஈர்ப்பை ஏற்படுத்தும். இந்த முறையும் பாமக நிழல் பட்ஜெட்டை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு மார்ச் 18-ம் தேதி பொது பட்ஜெட்டையும், 19-ம் தேதி வேளாண் பட்ஜெட்டையும் தாக்கல் செய்யவுள்ள நிலையில், தமிழக அரசுக்கான 2022 - 2023 ஆம் ஆண்டின் பொது நிழல் நிதிநிலை அறிக்கையை இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னையில் வெளியிட்டார்.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 15, 2022, 05:58 PM IST
  • தமிழ்நாட்டில் உழைப்பாளர் நாளான மே 1 முதல் முழுமையான மதுவிலக்கு
  • டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டணம், நேர்முகத் தேர்வு ரத்து
  • வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.5,000 உதவித் தொகை
தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு 80% இட ஒதுக்கீடு; மே 1 முதல் முழு மதுவிலக்கு: பாமக நிழல் பட்ஜெட்டின் அசத்தலான 52 அம்சங்கள்  title=

நிழல் பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள்: 

வரவு - செலவு

1. 2022-23 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின்  வருவாய் வரவுகள் ரூ.4,87,460 கோடியாக இருக்கும். இது கடந்த ஆண்டின் வருவாய் வரவை விட ரூ.1,94,670 கோடி அதிகமாக இருக்கும். கனிம வளங்களை சிறப்பான முறையில் கையாளுவதன் மூலம், வரி அல்லாத வருவாயாக ரூ.1,78,470 கோடி ஈட்ட திட்டம் வகுத்திருப்பதால்தான் இந்த அளவுக்கு அதிக வருவாய் சாத்தியமாகிறது.
2. நடப்பாண்டின் மொத்த செலவினம் ரூ.5,05,786 கோடியாகவும், வருவாய் செலவினம் ரூ.4,32,426 கோடியாகவும் இருக்கும். வருவாய் செலவினத்தில் ரூ.50,000 கோடி நிலுவையில் உள்ள கடனை அடைப்பதற்காக அசலாக செலுத்தப்படும். இதன்படி, அடுத்த 10 ஆண்டுகளில் தமிழக அரசின் தற்போதைய கடன் சுமை கட்டுக்குள் கொண்டுவரப்படும். வளர்ச்சித் திட்டங்களுக்காக புதிதாக வாங்கப்படும் கடன் மிக மிக குறைந்த அளவிலேயே இருக்கும்.
3. 2022-23 ஆம் ஆண்டில் தமிழக அரசின் வருவாய்க் கணக்கில் ரூ.55,034 கோடி உபரியாக இருக்கும். நிதிப்பற்றாக்குறை ரூ.18,326 கோடி என்ற அளவில் மிகக் குறைவாக இருக்கும். வருவாய்க் கணக்கில் உபரியாக இருக்கும் தொகை மூலதன செலவுகளுக்காக செலவிடப்படும் என்பதால் நிதிப்பற்றாக்குறை பெருமளவில் குறைந்திருக்கிறது.

தமிழக பொருளாதாரம் - ஓர் ஆய்வு!

4. 2021-22ஆம் ஆண்டில் ரூ.2,02,495 கோடி மொத்த வருவாய் ஈட்ட தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், தமிழகப் பொருளாதாரம் இன்னும் முழுமையாக மீளாததால், திசம்பர் மாதம் வரையிலான 9 மாதங்களில் ரூ.97,887 கோடி மட்டுமே, அதாவது 48.45% மட்டுமே வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதனால், திட்டமிட்ட வருவாய் இலக்கை எட்டுவது சாத்தியமல்ல.
5. 2021-22ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.58,692.68 கோடியாகவும் நிதிப்பற்றாக்குறை ரூ.92,520.65 கோடியாகவும் இருக்கும் என்று நிதிநிலை அறிக்கையில் மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தமிழ்நாடு அரசின் வருவாய் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதால், வருவாய் பற்றாக்குறையும், நிதிப்பற்றாக்குறையும் அதிகரிக்கும் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
6. 2021-22ஆம் ஆண்டில் தமிழக அரசு ரூ.92,484 கோடி கடன் பெறுவதற்கு திட்டமிட்டிருந்தது. ஆனால், அரசின் வருவாய் குறைந்து, வருவாய் பற்றாக்குறையும், நிதிப் பற்றாக்குறையும் அதிகரிக்கக்கூடும் என்பதால், தமிழக அரசு வாங்கவுள்ள  கடனும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2021-22ஆம் ஆண்டில் தமிழக அரசு வாங்கும் கடன் அளவு ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டுவதற்கு வாய்ப்புள்ளது.
7. 2022 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி, தமிழக அரசின் மொத்த கடன் தொகை ரூ.5,77,987 கோடியாக இருக்கும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதுவும் சுமார் ரூ.6 லட்சம் கோடி என்ற அளவை நெருங்கக்கூடும்.
8. 2021-22ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளின் அடிப்படையில், 2022-23ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மாநில உற்பத்தி மதிப்பு ரூ.23,82,031 கோடியாக இருக்க வேண்டும். பொருளாதார மந்தநிலையில் இருந்து விலகி வளர்ச்சிப் பாதையில் பயணிக்கத் தொடங்கியிருந்தாலும் கூட, 2022-23ஆம் ஆண்டில் இந்த அளவுக்கு பொருளாதார வளர்ச்சி இலக்கை தமிழ்நாட்டால் எட்ட இயலாது. மாநில உற்பத்தி மதிப்பு ரூ.23 லட்சம் கோடிக்கும் குறைவாகவே இருக்கும்.
9. 2022 - 23 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு சுமார் ரூ-.90,000 கோடி கடன் வாங்கக்கூடும். 31.03.2022 அன்று தமிழக அரசின் நேரடிக் கடன் சுமார் ரூ.5.95  லட்சம் கோடியாக இருக்கும் என்பதால், புதிதாக வாங்கப்படும் கடனையும் சேர்த்து 31.03.2023 அன்று தமிழக அரசின் நேரடிக்கடன் ரூ.6.85 லட்சம் கோடியாக இருக்கும்.
10. 2022-23ஆம் ஆண்டின் முடிவில் பொதுத் துறை நிறுவனங்களின் கடன் ரூ.4.65 லட்சம் கோடியாக இருக்கும் என்று உத்தேசிக்கலாம்.
11. 2022-23ஆம் ஆண்டின் நிறைவில் தமிழக அரசின் மொத்த கடன் ரூ.11.5 இலட்சம் கோடியாக இருக்கும். தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரின் பெயரிலும் ரு.1,44,836 கடன் இருக்கும். 4 பேர் கொண்ட குடும்பத்தின் பெயரில் ரூ.5,79,345 கடன் தமிழக அரசால் வாங்கப்பட்டிருக்கும்.

மேலும் படிக்க | 50% மது கணக்கில் காட்டாமல் விற்பனையா? விசாரணை தேவை: அன்புமணி இராமதாஸ்

பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கை

12. அடுத்த 4 ஆண்டுகளில் தமிழகத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பை ரூ.32 லட்சம் கோடியாக உயர்த்த வேண்டும். இதற்கு ஆண்டுக்கு 10%க்கும் கூடுதலான வளர்ச்சி எட்டப்பட வேண்டும்.
13. மத்திய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50% பங்கு அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
14. மத்திய அரசு வசூலிக்கும் மேல்வரி, கூடுதல் தீர்வை போன்றவை அடிப்படை வரியோடு இணைக்கப்பட வேண்டும். அதன் மூலம், அவற்றிலிருந்து கிடைக்கும் வருவாயிலிருந்தும் மாநில அரசுகளுக்கு பங்கு அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் ரூ.2,000

15. வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பங்களுக்கு அடிப்படை வருமானமாக மாதம் ரூ.2,000 வழங்கும் திட்டம் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் செயல்படுத்தப்படும்.
16. ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் ரூ.2,000 உதவி வழங்கப்பட்டாலும், அக்குடும்பங்களுக்கு அரசால் வழங்கப்படும் பிற சமூகப் பாதுகாப்பு திட்ட உதவிகளும் தொடர்ந்து வழங்கப்படும்.
வேலைவாய்ப்பு பெருக்க சிறப்பாண்டு
17. தமிழ்நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்கும் நோக்குடன் 2022-23ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு பெருக்க சிறப்பாண்டாக கடைபிடிக்கப்படும்.
18. 2022-23ஆம் ஆண்டில் அரசுத் துறைகளில் 20,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். ஏற்கெனவே முடக்கி வைக்கப்பட்டுள்ள 80,000 காலியிடங்கள் நிரப்பப்படும். அதன் மூலம் நடப்பு ஆண்டில் ஒரு லட்சம் பேருக்கு அரசு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு 80% இட ஒதுக்கீடு

19. தமிழ்நாட்டில் உள்ள தனியார் தொழில் வணிக நிறுவனங்களில் மாத வருமானம் ரூ.40,000 வரை உள்ள பணிகளில் 80% தமிழர்களுக்கு வழங்க புதிய சட்டம் நிறைவேற்றப்படும்.
20. தமிழ்நாட்டில் தொழில் திட்டங்களுக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்குவது கட்டாயம் ஆக்கப்படும்.
21. தொழில் திட்டங்களுக்கு நிலம் கொடுத்தவர்களின் குடும்பங்களில் உள்ள வேலைவாய்ப்பு பெற தகுதியானவர்களின் பட்டியல், முதலில் நிலம் கொடுத்தவர்களில் முன்னுரிமை என்ற அடிப்படையில் தயாரிக்கப்பட்டு, அந்த வரிசையில் வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
22. தமிழ்நாட்டில் தொழில், உற்பத்தி, தளவாட மேலாண்மை, உள்ளிட்டவற்றின் மூலமாக அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்பபு ஏற்படுத்தித் தரப்படும்.
23. வேளாண்மை மற்றும் தோட்டக்கலை சார்ந்த பணிகள் மூலம் 5 ஆண்டுகளில் 50 லட்சம் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும்.

ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி தொழில் முதலீடு

24. ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி என்ற அளவில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி தொழில் முதலீடு ஈர்க்கப்படும்.
25. நான்காம் தொழில்நுட்பப் புரட்சியை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, வேலைவாய்ப்பும் ஏற்றுமதியும் அதிகரிக்கப்படும்.
ஆண்டுக்கு 100 நாட்கள் சட்டப்பேரவைக் கூட்டம்
26. தமிழக சட்டப்பேரவை குறைந்தது ஆண்டுக்கு 3 முறையும், 100 நாட்களும் கூடி மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆக்கபூர்வ விவாதம் நடத்துவதை தமிழக அரசு உறுதி செய்யும்.
27. ஒவ்வொரு மாவட்டத்திலும் 12 லட்சம் பேர் இருக்கும் வகையில் மாவட்டங்களின் எல்லைகள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும். தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கை 60ஆக உயர்த்தப்படும்.
பெட்ரோல் & டீசல் விலை ரூ.5 குறைப்பு
28. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை ஓரளவு போக்கும் வகையில், அதன் மீதான வரி தமிழ்நாட்டில் லிட்டருக்கு ரூ.5 குறைக்கப்படும்.
29. தமிழ்நாட்டில் மின்சார வாரியம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் இழப்பில் இயங்கினாலும், மின் கட்டணமும், பேருந்துக் கட்டணமும் உயர்த்தப்படாது.

மாணவிகளுக்கு மாதம் ரூ.1000
30. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படும். அவர்கள் எதுவரை உயர்கல்வி கற்க விரும்புகிறார்களோ, அதுவரை இந்த உதவி வழங்கப்படும்.

இடைநிற்றலைத் தடுக்க ரூ.15,000 வரை நிதி

31. தமிழக அரசுப் பள்ளிகளில் படித்து 5ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஆறாம் வகுப்பில் சேரும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் ரூ.5,000 இடைநிற்றல் தடுப்பு உதவியாக வழங்கப்படும்.
32. அதேபோல், 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று 11ஆம் வகுப்பில் சேருவோருக்கு ரூ.10 ஆயிரமும், 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேருவோருக்கு ரூ.15 ஆயிரமும் வழங்கப்படும்.
33. தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்த 38 ஆயிரத்திற்கும் கூடுதலான குடும்பங்களுக்கு உச்சநீதிமன்ற ஆணைப்படி ஏற்கெனவே வழங்கப்பட்ட ரூ.50,000 தவிர, கூடுதலாக ரூ.1 லட்சம் நிதி வழங்கப்படும்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு
34. அரசுப் பள்ளிகளில் படித்தவர்களுக்கு  அரசு வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கீடு வழங்கப்படும்.
35. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மருத்துவம், பொறியியல், கலை அறிவியல் உள்ளிட்ட அனைத்து உயர் கல்வி மாணவர் சேர்க்கையிலும் 20% தனி இடஒதுக்கீடு வழங்கப்படும்.

நகர்ப்புற வேலை உறுதித் திட்டம்
36. நகர்ப்புறங்களில் வறுமையை ஒழிப்பதற்காக நகர்ப்புற ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்குவதற்கான நகர்ப்புற வேலை உறுதித் திட்டம் செயல்படுத்தப்படும்.
37. ஆதரவற்றோர் மற்றும் மூத்தக் குடிமக்களுக்கு அவர்கள் விண்ணப்பிக்காமலேயே மாத உதவித் தொகை ரூ.1500 வழங்கப்படும். பயனாளிகளின் எண்ணிக்கை 20 லட்சமாக உயர்த்தப்படும்.

வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.5,000 உதவித் தொகை
38. படித்துவிட்டு 5 ஆண்டுகளுக்கும் மேலாக வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு உதவும் வகையில், அவர்களுக்கான உதவித்தொகை உயர்த்தப்படுகிறது. அதன்படி, மாதம் ரூ.5,000 வரை உதவித்தொகை வழங்க அரசு தீர்மானித்துள்ளது. உதவித்தொகை விவரம்:
1. பத்தாம் வகுப்பில் தோல்வி ரூ.1,000
2. பத்தாம் வகுப்பில் தேர்ச்சி ரூ.2,000
3. 12ஆம் வகுப்பு தேர்ச்சி ரூ.3,000
4. பட்டப்படிப்பு முடித்தவர்கள் ரூ.4,000
5. பட்டமேற்படிப்பு முடித்தவர்கள் ரூ.5,000

டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டணம், நேர்முகத் தேர்வு ரத்து
39. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட அனைத்துத் தேர்வு வாரியங்கள் மூலம் நடைபெறும் பணி நியமனங்கள் அனைத்திற்கும் நேர்காணல் இரத்து செய்யப்படும்.
40. அனைத்து வகையான போட்டித் தேர்வுகளுக்கும் அனைவருக்கும் தேர்வுக் கட்டணம் ரத்து செய்யப்படும்.

ரூ.25 லட்சம் கோடியில் உட்கட்டமைப்பு
41. தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.25 லட்சம் கோடியில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும். அடுத்த 10 ஆண்டுகளில் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தி முடிக்கப்படும்.

வரி அல்லாத வருவாய் ரூ.1.78 லட்சம் கோடி
42. 2022-23ஆம் ஆண்டில் வரி அல்லாத வருவாய் ரூ.1.78 லட்சம் கோடியாக அதிகரிக்கும்.
43. கிரானைட், தாதுமணல் விற்பனை மூலம் ரூ.1.15 லட்சம் கோடியும், மணல் இறக்குமதி, செயற்கை மணல் விற்பனை ஆகியவற்றின் மூலம் ரூ.30,000 கோடியும் ஈட்டப்படும்.
44. பொதுத்துறை நிறுவனங்களை லாபத்தில் இயங்கச் செய்வதன் மூலம் ரூ.15,000 கோடி கிடைக்கும்.
45. பிற ஆதாரங்களில் இருந்து வரி அல்லாத வருவாயை கணிசமாக பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
46. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும்.

புதிய உயர்கல்வி நிறுவனங்கள்
47. தமிழ்நாட்டில் உலகத் தரம் வாய்ந்த உயர்கல்வி நிறுவனங்கள் தொடங்கப்படும். அவற்றின் விவரம் வருமாறு:
1. அண்ணா பல்கலைக் கழகம் உயர் சிறப்பு கல்வி நிறுவனமாக (Anna University  Institute of Eminence (IoE)) மாற்றப்படும். மாணவர் சேர்க்கை மற்றும் இடஒதுக்கீட்டில் இப்போதுள்ள நடைமுறையே தொடரும்.
2. பொறியியல் கல்லூரிகளை நிர்வகிக்க அண்ணா பல்கலைக் கழகம்  - இணைப்பு (Anna University Affiliation) என்ற புதிய பல்கலைக் கழகம் உருவாக்கப்படும்.
3. சென்னைப் பல்கலைக் கழகம் உயர்சிறப்பு கல்வி நிறுவனமாக தரம் உயர்த்தப்படும்.
4. தமிழ்நாட்டில் 5 இடங்களில் ஐ.ஐ.டிக்கு இணையான தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (Tamilnadu Institute of Technology - TIT) ஏற்படுத்தப்படும்.

மதுவிலக்கு
48. தமிழ்நாட்டில் உழைப்பாளர் நாளான மே 1 முதல் முழுமையான மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும்.

வலிமையான லோக் ஆயுக்தா
49. தமிழ்நாட்டில் தற்போது முடக்கப்பட்டிருக்கும் லோக் அயுக்தாவிற்கு புத்துயிரூட்டப்படுவதுடன், கூடுதல் அதிகாரங்களும் வழங்கப்படும்.
50. முதலமைச்சர், அமைச்சர்கள், அரசுத் துறை உயரதிகாரிகள் லோக்அயுக்தாவின் அதிகார வரம்பிற்கு கீழ் கொண்டுவரப்படுவார்கள்.
பொதுச் சேவை உரிமைச் சட்டம்
51. தமிழ்நாட்டில் பொதுச் சேவை பெறும் உரிமைச் சட்டம் கொண்டுவரப்படும். நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இதற்கான மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்படும்.
மின் கட்டணம் குறைப்பு
52. தமிழ்நாட்டில் இரு மாதங்களுக்கு ஒரு முறை மின்கட்டணம் செலுத்தும் முறை மாற்றப்பட்டு, மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்படும். இதனால் மின்கட்டணம் மேலும் 56% குறையும்.

மேலும் படிக்க | பாஜகவிடம் உதவி கேட்ட சசிகலா? எதிர்பார்க்காத இபிஎஸ்! காத்திருக்கும் டிவிஸ்ட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News