சர்ச்சை பேச்சு! உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்களின் மறைவு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக வந்த புகார் தொடர்பாக இன்று விளக்கம் அளிக்க உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது தி.மு.க. இளைஞரணித் தலைவரும், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளருமான உதயநிதி ஸ்டாலின், தாராபுரத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது முன்னாள் மத்திய அமைச்சர்க்கள் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அருண் ஜெட்லி ஆகியோரின் மறைவு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகாா்கள் எழுந்தன.
இது உண்மைக்கு மாறான தகவல் என்று கூறி, சுஷ்மா ஸ்வராஜின் மகள் ட்விட்டர் மூலம் மறுப்பு தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையம் (Election Commission) நடவடிக்கை எடுக்க வேண்டும் பா.ஜ.க. (BJP) சார்பில் ஏப்ரல் 2-ம் தேதி புகார் அளிக்கப்பட்டது.
பாஜக குழு சார்பில் தேர்தல் ஆணையத்திடம் அளித்த புகாரில், "முன்னாள் மத்திய அமைச்சர்களான சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அருண் ஜெட்லி (Arun Jaitley) ஆகியோருக்கு எதிராக பேசிய அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி உள்ளனர். மேலும் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனுவை தகுதி நீக்கம் செய்யக் கோரியதோடு, அவரை திமுக நட்சத்திர பேச்சாளர் (DMK Star Campaigners List) பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்றும், அவரது பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடந்த மார்ச் 31 ஆம் தேதி தாராபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin), "பிரதமர் நரேந்திர மோடியின் அழுத்தம் காரணமாக மத்திய அமைச்சர்களான சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அருண் ஜெட்லி ஆகியோர் மரணமடைந்தனர்" என உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து தி.மு.க. இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் ஏப்ரல் 7ஆம் தேதி (இன்று) மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR