டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் 22ம் தேதியுடன் முடிவடைகிறது. புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக, இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. ஒரு கோடியே 47 லட்சம் வாக்காளர்கள், வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 672 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 13 ஆயிரத்து 750 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. டெல்லி போலீசார் 42 ஆயிரம் பேர், ஊரக காவல்படையினர் 19 ஆயிரம் பேர் மற்றும் 190 கம்பெனி மத்திய படையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போராட்டங்கள் நடைபெற்று வரும் ஷகீன்பாக், ஜாமியா நகர், சீலம்புரி உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பும் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


வாக்குப்பதிவு தொடங்கிய காலை 8 மணி முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி, முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால், சாந்தினி சவுக் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அல்க்கா லம்பா, பாஜக எம்.பி. மீனாட்சி லேகி உள்ளிட்டோர் வாக்குகளை பதிவு செய்தனர். புது டெல்லி தொகுதியில் போட்டியிடும், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்குப்பதிவு செய்தார்.


குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அவரது மனைவி சவிதா கோவிந்த் ஆகியோரும் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வாக்குகளை பதிவு செய்தனர். இதை தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் ராகுல்காந்தி வாக்களித்தனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அவரது மனைவி குர்சரண் சிங் ஆகியோரும் வாக்களித்தனர்.


மேலும், 110 வயது பெண் வாக்காளரான காளிதாரா மண்டல், கிரேட்டர் கைலாஷ் தொகுதியில் வாக்களித்தார். இதேபோல மணமகன் ஒருவர், திருமணம் முடித்த கையோடு வந்து வாக்களித்தார்.



நண்பகல் 12 மணி நிலவரப்படி, 15.68% பேர் வாக்களித்துள்ளனர். தேசிய தலைநகரில் வாக்குப்பதிவு சதவீதம் குறைவாகவே உள்ளது.