விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக, நாங்குநேரியில் காங்., -MKS!
திமுக தலைமையிலான கூட்டணி சார்பில், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுகழகமும் – நாங்குநேரி தொகுதி மற்றும் புதுவை மாநிலத்தில் உள்ள காமராஜர் நகர் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடும்` என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைமையிலான கூட்டணி சார்பில், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுகழகமும் – நாங்குநேரி தொகுதி மற்றும் புதுவை மாநிலத்தில் உள்ள காமராஜர் நகர் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடும்" என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் அளித்த பேட்டி விவரம்., "இன்று தேர்தல் ஆணையம், நடைபெறவிருக்கும் தேர்தல்களுக்கான தேதியை அறிவித்திருக்கிறது. குறிப்பாக, தமிழகத்தில் விக்கிரவாண்டி தொகுதி, நாங்குநேரி தொகுதி மற்றும் புதுவை மாநிலத்தில் இருக்கும் காமராஜ் நகர் தொகுதி, இந்த 3 தொகுதிகளுக்குரிய இடைத்தேர்தலும் எதிர்வரும் அக்டோபர் மாதம் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
எனவே, இதுகுறித்துப் பேசிட அண்ணா அறிவாலயம் வந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு.கே.எஸ்.அழகிரி அவர்களுடனும் கட்சியின் முன்னோடிகளுடனும் விவாதித்தோம், கலந்து பேசினோம்.
அந்த அடிப்படையில் விக்கிரவாண்டி தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிட முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல், புதுவை மாநிலத்தில் இருக்கும் காமராஜ் நகர் தொகுதியிலும் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
செய்தியாளர் : தி.மு.கழகத்தின் சார்பில் போட்டியிடும் விக்கிரவாண்டி வேட்பாளர் எப்போது அறிவிக்கப்படுவார்?
ஸ்டாலின் : நாளை மறுநாள் வேட்பாளர்களுக்கான விருப்பமனு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று அறிவித்திருக்கிறோம். விருப்பமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட அடுத்த நாளே, வேட்பாளர் தேர்வுசெய்யப்பட்டு அறிவிக்கப்பட இருக்கிறார்.
செய்தியாளர் : காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப் படவிருக்கிறார்கள். எனவே, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் எப்போது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குவதாக இருக்கிறீர்கள்?
ஸ்டாலின் : தேர்தல் தேதியினை இன்றைக்குதான் அறிவித்திருக்கிறார்கள்.
எந்தக் கட்சி எந்தத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று, கலந்துபேசி இன்றைக்குத்தான் நாங்கள் அறிவித்திருக்கிறோம்.
இதைத் தொடர்ந்து கூட்டணிக் கட்சியில் இடம்பெற்றிருப்பவர்களோடும் கலந்து பேசி, அதுகுறித்து முடிவு செய்யப்பட்டதும் பின்னால் அறிவிப்போம்.
செய்தியாளர் : தேர்தல் தேதி தற்போதுதான் அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே, வேட்பாளர்கள் விருப்ப மனுத்தாக்கல் செய்வதற்கான நாட்கள் மிகவும் குறைவாக இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?
ஸ்டாலின் : விருப்பமனு தாக்கல் செய்வதற்கான நாட்கள் 23-ம் தேதியிலிருந்து 29-ம் தேதி வரையில் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால், அதில் எந்தவிதச் சங்கடமும் இருப்பது போல் எனக்குத் தெரியவில்லை.
இருந்தாலும் நாங்கள், எந்தெந்தத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று இன்றைக்கே முடிவு செய்து விட்டோம்.
நாளை மறுநாள் தி.மு.க.,விலும், காங்கிரஸ் கட்சியிலும் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்பமனுக்களை முறைப்படி வாங்கப் போகிறோம். அதேபோல், விரைவில் வேட்பாளர்களையும் அறிவிக்கவிருக்கிறோம். அந்தப் பணிகளை வேகமாகவும், உடனடியாகவும் செய்வதற்கான முயற்சியில் முழுமையாக ஈடுபட இருக்கிறோம்.
செய்தியாளர் : இந்தியா முழுவதும் பொருளாதார வீழ்ச்சி என்று பேசிக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்ந்திருக்கிறது. அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
ஸ்டாலின் : இவற்றுக்கெல்லாம் இந்தத் தேர்தல் வாயிலாக ஒரு பதில் விரைவில் கிடைக்கும்.