ஆந்திர முதல்வராக பதவியேற்க உள்ள ஒய்எஸ்ஆர் காங். தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி பிரதமர் மோடியுடன் சந்திப்பு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுடன், ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றது. இதில், மொத்தமுள்ள 175 தொகுதிகளில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 151 தொகுதியில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதையடுத்து அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 


மோடி அரசுக்கு வெளியில் இருந்தபடி நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதுடன், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் பிரதமரிடம் அவர் முன்வைக்க உள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் கட்சிக்கே தமது ஆதரவு என்றும் வெளிப்படையாக ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், அவர் வருகிற 30 ஆம் தேதி பதவியேற்க உள்ளதை அடுத்து, நேற்று மாலை அம்மாநில ஆளுநர் இ.எல். நரசிம்மனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். தொடர்ந்து, ஆந்திராவில் சட்டப்பேரவை கலைக்கப்பட்டதாக ஆளுநர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 



இதைத்தொடர்ந்து ஜெகன் மோகன் ரெட்டி, இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்கவுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கும் அவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து இருவரும் அரசியல் நிலவரங்கள் குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.