25 நாட்களுக்கு பின்னர் இன்று தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்தார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதற்கட்டமாக 17 பேர் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆளுநர் மாளிகையில் அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் வஜூபாய் வாலா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். 


ஈஸ்வரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர், ஆர்.அசோகா, கோவிந்த மக்தப்பா கரஜோல், டாக்டர் அஷ்வத் நாராயணா, லக்ஷ்மண் சங்கப்பா சவாதி, பி.ஸ்ரீராமுலு, சுரேஷ் குமார், சோமண்ணா, சி.டி.ரவி, பசவராஜ் பொம்மை, கோட்டா சீனிவாஸ் பூஜாரி, மது சுவாமி, சந்திரகாந்த கவுடா, எச்.நாகேஷ் (சுயேட்சை எம்எல்ஏ), பிரபு சவுகான், சசிகலா ஜோலே ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.



பதவியேற்பு விழாவில் முதல்வர் எடியூரப்பா, கர்நாடக அரசின் தலைமை செயலாளர் விஜயபாஸ்கர் மற்றும் அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.


புதிதாக அமைச்சர் பதவியை ஏற்பவர்கள் ஒவ்வொருவருக்கும் 2 அல்லது 3 இலாகாக்கள் ஒதுக்கப்பட உள்ளது. சட்டப்படி கர்நாடக அமைச்சரவையில் முதல்வர் உள்பட 34 பேர் இடம் பெற முடியும். இந்நிலையில் இன்றைய பதவியேற்ப்புக்கு பின்னர் முதல்வர் எடியூரப்பா உள்பட 18 பேர் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பதால், மீதம் உள்ள 16 அமைச்சரவை காலி இடங்களுக்கு விரைவில் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.


கர்நாடகாவில் அமைச்சர்கள் யாரும் இல்லாததால் முதல்வர் எடியூரப்பா தலைமையில் நடைபெற்ற 3 அமைச்சரவை கூட்டங்களிலும், தலைமை செயலாளர் மற்றும் அதிகாரிகள் மட்டுமே பங்கேற்றனர். இதனால் மழைவெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் நீடிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்த நிலையில், கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.