கர்நாடக சட்டப்பேரவையில் பெரும்பானமையை நிரூபித்தார் எடியூரப்பா!
கர்நாடக சட்டசபையில் முதல்வர் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க இருப்பதால் அது பாஜகவுக்கு நன்மை!!
Jul 29, 2019 11:48 AM
நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசுக்கு வெற்றி. குரல் வாக்கெடுப்பு மூலம் எடியூரப்பா தாக்கல் செய்த நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் நிறைவேறியது .
Jul 29, 2019 11:36 AM
அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு எடியூரப்பா நன்றி தெரிவித்து நம்பிக்கை தீர்மானத்தை தாக்கல் செய்திருக்க வேண்டும். 17 தகுதி நீக்க எம்எல்ஏக்களை கைவிட்டு விடாதீர்கள் என எடியூரப்பாவை கேட்டுக்கொள்கிறேன்- குமாரசாமி பேச்சு.
Jul 29, 2019 11:35 AM
அதிருப்தி எம்எல்ஏக்களை பாஜகவினர் தெருவில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளனர்- சட்டசபையில் குமாரசாமி பேச்சு
Jul 29, 2019 11:25 AM
எடியூரப்பா தாக்கல் செய்துள்ள நம்பிக்கை தீர்மானம் சட்ட விரோதமானது- சட்டசபையில் சித்தராமையா பேச்சு
Jul 29, 2019 11:25 AM
எடியூரப்பா முதல்வராக தொடர வேண்டும் என்று நான் விரும்புகிறேன், ஆனால் அது கேரண்டி இல்லை- சித்தராமையா பேச்சு
Jul 29, 2019 11:07 AM
சித்தராமையா, குமாரசாமி ஆட்சியில் எதிர்க்கட்சிகளை பழி வாங்கவில்லை- எடியூரப்பா. நானும் துவேச அரசியலை முன்னெடுக்க மாட்டேன்- சட்டசபையில் எடியூரப்பா பேச்சு. மறப்போம், மன்னிப்போம் என்ற கொள்கையில் எனக்கு நம்பிக்கை உள்ளது. பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா ஆகியோரின் ஆதரவால் முதல்வராகியுள்ளேன்.
Jul 29, 2019 11:06 AM
நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை சட்டசபையில் தாக்கல் செய்தார் எடியூரப்பா. தீர்மானத்தின் மீது எடியூரப்பா உரையாற்ற துவங்கினார்.
Jul 29, 2019 11:05 AM
பதவியை ராஜினாமா செய்கிறார் சபாநாயகர் கர்நாடகா சபாநாயகர் ரமேஷ்குமார் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக சூசகமாக தெரிவித்துள்ளார்.
Jul 29, 2019 11:04 AM
சபாநாயகர் ரமேஷ்குமார் வருகையை தொடர்ந்து வந்தே மாதரம் பாடலுடன், கர்நாடக சட்டசபை அலுவல் துவங்கியது
கர்நாடக சட்டசபையில் முதல்வர் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க இருப்பதால் அது பாஜகவுக்கு நன்மை!!
கர்நாடக முதலமைச்சர் BS.எடியூரப்பா தனது பெரும்பான்மையை சட்டசபையில் இன்று நிரூபிக்கவுள்ளார். நான்காவது முறையாக கர்நாடகா முதல்வராக பதவியேற்று மூன்று நாட்கள் கழித்து. பாஜக தனது 105 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் திங்கள்கிழமை காலை 11 மணி முதல் சட்டமன்றத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிக்கையை வெளியிட்டுள்ளது.
கர்நாடகத்தை ஆட்சி செய்த மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணியின் எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் ராஜினாமா செய்ததால், குமாரசாமி அரசுக்கு சிக்கல் ஏற்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் குமாரசாமி அரசு கவிழ்ந்தது.
இதையடுத்து, 105 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா நான்காவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். எடியூரப்பா அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கர்நாடக சட்டப்பேரவையில் இன்று நடைபெறுகிறது.
ஏற்கனவே 3 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், நேற்று மேலும் 14 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் ரமேஷ் குமார் தகுதிநீக்கம் செய்தார். அவர்கள் 2023ஆம் ஆண்டு வரை அவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் அவர் அறிவித்தார். 17 பேர் தகுதி நீக்கத்தால் கர்நாடக சட்டப்பேரவை பலம் 208ஆக குறைந்துள்ளது. பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான 105 உறுப்பினர்களை பாஜக பெற்றுள்ளதால், இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசுக்கு பிரச்சனை ஏற்படாது என்று கருதப்படுகிறது.
பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் எடியூரப்பா, தாம் பெரும்பான்மையை நிரூபிப்பது 100 சதவீதம் உறுதி என்று தெரிவித்தார். முந்தைய அரசில் கொண்டு வரப்பட்ட நிதி மசோதாவை அப்படியே தாக்கல் செய்யப் போவதாகவும், உடனடியாக அதை நிறைவேற்றப் போவதாகவும் கூறினார். இல்லை என்றால் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கூட கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டு விடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 14 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடரப்பட உள்ளது. தகுதிநீக்கம் செய்யப்பட்ட மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ. ஏ.எச்.விஸ்வநாத், இந்த தகுதி நீக்கம் சட்டவிரோதமானது எனக் குறிப்பிட்டார். சபாநாயகர் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு, ஆஜராக தவறினார்கள் என்ற ஒரே காரணத்துக்காக யாரையும் தகுதி நீக்கம் செய்துவிட முடியாது எனவும், சபாநாயகரின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.