மகாராஷ்டிர அரசியலில் நடந்தேறிய திடீர் திருப்பங்களை அடுத்து, ’கட்சியும் குடும்பமும் உடைந்து விட்டதாக’ தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாரின் மகள் வருத்தம் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாராஷ்டிராவில் (Maharashtra) எதிர்பாராத திருப்பமாக தேசியவாத காங்கிரஸும் (NCP) பாஜக-வும் (BJP) கூட்டணி அமைத்து ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ளது. இவ்விரு கட்சி கூட்டணியில் ஆட்சியமைப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர்தான், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர், சரத் பவார் (Sharad Pawar), சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி அமையும் என்று உத்தரவாதம் அளித்திருந்தார்.


நேற்றிரவு வரை அஜித் பவார், மூன்று கட்சிகளுக்கு இடையில் நடந்த கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் முழு வீச்சில் கலந்து கொண்டார். நேற்றைய சந்திப்பைத் தொடர்ந்து சரத் பவார், சிவசேனாவின் உத்தவ் தாக்கரேதான் மகாராஷ்டிராவின் முதல்வராக இருப்பார் என்று தெரிவித்தார். 


இன்று மதியம் உத்தவ் தாக்கரேவும் சரத் பவாரும் இணைந்து செய்தியாளர்களை சந்திப்பதாக இருந்தது.


ஆனால் யாரும் எதிர்பாரா விதமாக இன்று காலை மகாராஷ்டிராவில் பாஜக (Bharatiya Janata Party) தனது அரசாங்கத்தை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் அமைத்தது. பாஜக-வின் தேவேந்திர ஃபட்னாவிஸ் (Devendra Fadnavis) முதல்வராக பதவியேற்றார்,  NCP கட்சியை சேர்ந்த அஜித் பவார் (Ajit Pawar) துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இருவருக்கும் மாநில ஆளுநர் பகத் சிங் கோஷியாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். 



இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே (Supriya Sule), தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் “கட்சியும் குடும்பமும் உடைந்துவிட்டது,” உருக்கமான பதிவு ஒன்றினை இட்டுள்ளார். சுப்ரியாவின் இந்த ஸ்டேட்டஸ் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் நிலவி வரும் குழப்பத்தை மக்களுக்கு எடுத்து காட்டுகிறது.


இன்று சுப்ரியா சுலே-வின் உறவினரும் சரத் பவாரின் மருமகனுமான அஜித் பவார், மகாராஷ்டிராவின் துணை முதல்வராக பொறுப்பேற்றார். தேசியவாத காங்கிரஸ் தரப்பில் இருக்கும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும்(54) தங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக பாஜக, ஆளுநரிடம் தெரிவித்துள்ளது. எனினும் இதனை மறுக்கும் சரத் பவார், “அஜித் பவார், மகராஷ்டிராவில் ஆட்சியமைக்க பாஜக-வுக்கு ஆதரவு தெரிவித்தது அவருடைய சொந்த விருப்பமாகும். இதற்கும் தேசியவாத காங்கிரஸுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்த முடிவை நாங்கள் ஏற்கவில்லை,” என்று ட்விட்டர் மூலம் கருத்து தெரிவித்துள்ளார்.