நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறது பாஜக -மோடி!
மக்களவை தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் தற்போது பாஜக நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்!
மக்களவை தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் தற்போது பாஜக நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்!
மாலத்தீவு மற்றும் இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, தனது பயணத்தை முடித்து கொண்டு இன்று பிற்பகல் ஆந்திர மாநிலம் திருப்பதி வந்தடைந்தார். திருப்பதி வந்தடைந்த அவரை கவர்னர் நரசிம்மன், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் வரவேற்றனர்.
இதனையடுத்து அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது.. "நாங்கள் 365 நாளும் மக்களுக்காக கடுமையாக உழைத்தோம். இதனால், மக்கள் எங்களுக்கு ஆதரவு அளித்தனர். பெரிய அளவில் மக்கள் எங்களுக்கு ஆதரவு அளித்துள்ளதன் மூலம், சிலர், அரசு மீதான நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது என நினைக்கின்றனர்.
அவர்கள், மோடியால் என்ன செய்ய முடியும் என கருதுகின்றனர். ஆனால் நாங்கள், இதனை பெரிய வாய்ப்பாக கருதுகிறோம். ஒளிமயமான இந்தியாவிற்கான ஒரு வாய்ப்பாக கருதுகிறேன். 130 கோடி இந்தியர்களின் பங்களிப்பு மற்றும் ஆதரவுடன் இந்தியாவிற்கான புதிய பாதையை உருவாக்க விரும்புகிறோம் என தெரிவித்தார்.
மேலும் பொது மக்கள் அனைவரும் ஒரு அடி முன் எடுத்து வைத்தால், நாடு பல அடி முன்னெறும். 130 கோடி மக்களின் கனவுகளை நிறைவேற்ற கடவுள் ஏழுமலையானிடம் ஆசி கேட்க வந்துள்ளேன். மத்திய மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர் சிலர், இன்னும் தேர்தல் முடிவிலிருந்து வெளிவரவில்லை. ஆனால், எங்களை பொறுத்தவரை தேர்தல் முடிந்துவிட்டது. தற்போது நாட்டின் வளர்ச்சி மற்றும் மக்களின் நலத்திட்டங்களில் கவனம் செலுத்தி வருகிறோம். ஆந்திரா வளர்ச்சியில் உச்சம் பெற வாய்ப்பு உள்ளது. மாநிலத்தின் வளர்ச்சிக்காக, மாநில அரசிற்கு மத்திய அரசு உதவி வழங்கும்.
ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில், ஆந்திரா இன்னும் முன்னேறும். தமிழகம் மற்றும் ஆந்திராவின் வளர்ச்சிக்காக பாஜக தொண்டர்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர் என பேசினார்.
இதனைத்தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோயில் சென்ற பிரதமர் மோடி, அங்கு சாமி தரிசனம் செய்தார்.