லேசான கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு AYUSH அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள்..!!!
உணவு தொடர்பான அறிவுறுத்தல்கள், யோகா மற்றும் ஆயுர்வேத மூலிகைகள், அஷகந்தா மற்றும் ஆயுஷ் -64 போன்ற மருந்துகள் ஆகியவை பட்டியலிடப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் நோய்த்தொற்று நோயாளிகளில், லேசான அறிகுறி அல்லது அறிகுறி இல்லாதவர்களுக்கான ஆயுர்வேத மருத்துவ முறை பயன்பாடு தொடர்பான வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளார்.
இதில் உணவு தொடர்பான அறிவுறுத்தல்கள், யோகா மற்றும் ஆயுர்வேத மூலிகைகள், அஷவகந்தா மற்றும் ஆயுஷ் -64 போன்ற மருந்துகள் ஆகியவை பட்டியலிடப்பட்டுள்ளன.
கொரோனா தொற்று வராமல் தடுக்கும் ஆயுர்வேத மருந்துகள், தற்கால நோய்கள் பலவற்றை தீர்ப்பதிலும் சிறப்பாக செயலாற்றுகிறது என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் குறிப்பிட்டார்
"துரதிர்ஷ்டவசமாக, சுதந்திரத்திற்குப் பிறகு ஆயுர்வேதம் மருத்துவம் அதிக கவனம் பெறவில்லை, பிரதமர் நரேந்திர மோடி இப்போது இதற்கு முக்கியத்துவம் அளித்து வருவதால், இது கவனம் பெறுகிறது” என்றார்.
"சுகாதார அமைச்சகம் வழங்கிய வழிகாட்டுதல்களில், ஆயுர்வேதமும் யோகாவும் நிச்சயமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஒரு முக்கிய பங்கை வகித்து வருகிறது. COVID-19க்கு எதிரான நோய் எதிர்ப்பை அதிகரிப்பதற்கும், கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு அது தீவிரமடையாமல் தடுப்பதற்கும் ஆயுர்வேதமும் யோகாவும் பெரிதும் உதவியுள்ளன” என அவர் குறிப்பிட்டார்.
சூடான மஞ்சள் கலந்த பாலை அருந்துதல், சயவன்பிராஷ் எடுத்துக் கொள்ளுதல் ஆகியவற்றை கடைபிடிக்கும் போது, தொற்று பெருமளவில் கட்டுப்படுத்தப்படுவதாக ஆயுஷ் அமைச்சகம் கூறியுள்ளது.
ஒரு சிட்டிகை மஞ்சள் மற்றும் உப்பு கலந்த வெதுவெதுபான நீரில் கொப்புளித்தல், நாசி துவாரங்களில் மருந்து எண்ணெயைப் பயன்படுத்துதல், எண்ணெய் அல்லது பசுவின் நெய் ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை நாசியில் தடவுதல், குறிப்பாக வெளியே செல்வதற்கு முன்பும், வந்தபின்னும் சூடான நீரில் ஓமம், புதினா, யூகலிப்டஸ் எண்ணெய் போன்றவற்றை போட்டு ஆவி பிடிப்பதற்கும் அமைச்சகம் பரிந்துரைத்தது. மிதமான உடல் பயிற்சிகள் மற்றும் யோகா நெறிமுறையை ஒரு பழக்கமாக பின்பற்றவும் ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
மேலும் படிக்க | தமிழக நிலவரம்: 10,000-த்தை நெருங்கும் இறப்பு எண்ணிக்கை; இன்று 71 பேர் உயிரிழப்பு