மீண்டும் வைரஸ்!! உலகை அச்சுறுத்தும் மங்கிபாக்ஸின் புதிய மாறுபாடு: அவசரநிலையை அறிவித்த WHO
Monkeypox: உலக சுகாதார அமைப்பு (WHO) சமீபத்தில் மங்கிபாக்ஸின் புதிய மாறுபாட்டின் காரணமாக உலகளாவிய அவசரநிலையை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு பரவிய மங்கிபாக்ஸை விட இந்த புதிய வகை கொடியதாக இருப்பதாக கூறப்படுகிறது.
Monkeypox: கொரோனா வைரஸால் உருவான பெருந்தொற்று உலகையே புரட்டிப்போட்டது. அதன் தாக்கத்திலிருந்து இப்போதுதான் உலக மக்கள் சிறிது சிறிதாக மீண்டு வருகிறார்கள். இந்த நிலையில் அடுத்தடுத்து பல வைரஸ்கள் அவ்வப்போது உலகை அச்சுறுத்தி வருகின்றன. அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு வைரஸ் தொற்றின் அச்சம் உலகை பற்றியுள்ளது.
மங்கிபாக்ஸ்: அவசரநிலையை அறிவித்த உலக சுகாதார அமைப்பு
உலக சுகாதார அமைப்பு (WHO) சமீபத்தில் மங்கிபாக்ஸின் புதிய மாறுபாட்டின் காரணமாக உலகளாவிய அவசரநிலையை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு பரவிய மங்கிபாக்ஸை விட இந்த புதிய வகை கொடியதாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, ஆப்பிரிக்காவின் காங்கோ ஜனநாயகக் குடியரசில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மங்கிபாக்ஸால் பாதிக்கப்பட்டதாக தரவுகள் பதிவாகியுள்ளன. அவர்களில் 524 பேர் இறந்துள்ளனர். 15 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிக ஆபத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது. மங்கிபாக்ஸ் நோய் இதுவரை ஆப்பிரிக்காவில் 13 நாடுகளில் பரவியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நாடுகளில் சிலவற்றில் இதுவே முதன்முறை. இங்கெல்லாம் இதற்கும் முன்னர் மங்கிபாக்ஸால் யாரும் பாதிக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மங்கிபாக்ஸ் தொற்று ஆப்பிரிக்காவுக்கு வெளியே மற்ற நாடுகளுக்கும் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகமாக உள்ளதாக WHO இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார். இது உலக நாடுகள் இடையே பீதியை கிளப்பியுள்ளது.
MPox: மங்கிபாக்ஸ் என்றால் என்ன?
- மங்கிபாக்ஸ் ஒரு தொற்று நோயாகும்.
- இது 1970 ஆம் ஆண்டில் காங்கோ ஜனநாயகக் குடியரசில் முதன்முதலில் கண்டறியப்பட்டது.
- இந்த வைரஸில் கிளேட் I மற்றும் கிளேட் II என இரண்டு வகைகள் உள்ளன.
Clade I மற்றும் Clade II இடையே உள்ள வேறுபாடு என்ன?
இந்த இரண்டு வகைகளில் கிளேட் I மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகின்றது. இது பல தசாப்தங்களாக மத்திய ஆபிரிக்காவின் காங்கோ படுகையில் தன் கோர முகத்தை காட்டி வருகின்றது. கிளேட் II வகையில் தீவிரம் சற்று குறைவாக இருக்கும். மேற்கு ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் இது உள்ளது. முன்னதாக, பெரும்பாலான சந்தர்ப்பங்களில், கொறித்துண்ணிகள் போன்ற பாதிக்கப்பட்ட விலங்குகளுடன் தொடர்பில் வந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல், தசை வலி மற்றும் தோலில் பெரிய கொப்பளங்கள் ஆகியவை இந்த நோயின் அறிகுறிகளில் அடங்கும்.
மேலும் படிக்க | சிக்குன்குனியா குணமான பின்னும் விடாமல் தொடரும் மூட்டு வலி: காரணம் என்ன தெரியுமா?
கிளேட் II இன் புதிய மாறுபாடு
2022 மே மாதம் கிளேட் II -வின் குறைந்த தீவிரம் கொண்ட மாறுபாடான கிளேட் IIb உலகம் முழுவதும் பரவியது. இது முதன்மையாக ஓரினச்சேர்க்கை மற்றும் இருபாலின ஆண்களை பாதிக்கிறது. ஜூலை 2022 இல், WHO இதை உலகளாவிய அவசரநிலையாக அறிவித்தது. இந்த தொற்று மே 2023 வரை நீடித்தது.
கிளேட் I இன் புதிய மாறுபாடு
இப்போது கிளேட் I இன் புதிய பிறழ்ந்த மாறுபாடு, கிளேட் Ib -ஐ உருவாகியுள்ளது. இந்த மாறுபாடு மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகின்றது. இது முதன்முதலில் செப்டம்பர் 2023 இல் காங்கோவின் கமிடுகா நகரில் பாலியல் தொழிலாளர்களிடம் கண்டறியப்பட்டதாக கூறப்படுகின்றது.
புதிய மாறுபாடுகள் ஏன் கவலைக்குரியவையாக கருதப்படுகின்றன?
கிளேட் I இன் புதிய மாறுபாட்டின் மூலம் எழும் மிகப்பெரிய கவலை என்னவென்றால், பாலியல் தொடர்பு தவிர வேறு வழிகளிலும் இது பரவுகிறது. இது குழந்தைகளையும் பாதிக்கிறது. Clade Ib காரணமாக பாதிக்கப்பட்ட மக்களில் 3.6 சதவீத நோயாளிகள் இறந்துள்ளனர். இது ஒப்பீட்டளவில் Clade II -ஐ விட கடுமையான நோயை ஏற்படுத்துவதாக கூறப்படுகின்றது. காங்கோவின் கிட்டத்தட்ட அனைத்து மாகாணங்களும் இப்போது கிளேட் I அல்லது கிளேட் Ib ஆல் பாதிக்கப்பட்டுள்ளன என்பது கவலையளிக்கும் செய்தியாக உள்ளது.
கடந்த ஆண்டை விட அதிக பாதிப்பு
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டின் முதல் பாதியில் மங்கிபாக்ஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக WHO தரவுகள் தெரிவிக்கின்றன. ஜனவரி 2022 மற்றும் ஆகஸ்ட் 4, 2024 க்கு இடையில் ஆப்பிரிக்காவில் 38,465 பேர் மங்கிபாக்சால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆப்பிரிக்காவின் CDC தெரிவிக்கின்றது. மேலும் 1,456 இறப்புகள் பதிவாகியுள்ளன. சமீபத்தில், புருண்டி, கென்யா, ருவாண்டா மற்றும் உகாண்டாவிலும் மங்கிபாக்சால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளி பற்றிய விவரங்கள் பதிவாகியுள்ளன. இந்த புதிய மாறுபாடு உலகம் முழுவதும் கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. இது மேலும் பவருவதை தடுக்கவும், சிகிச்சையின் திறனை உயர்த்தவும், இது குறித்த கூடுதல் தகவல்களை சேகரிக்க விஞ்ஞானிகள் பணியாற்றி வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ