“ராமர் என்ன கொடுத்தார்?” ராமர் கோயில் குறித்து பேசிய 13 வயது சிறுவன்..வைரல் வீடியோ!
Viral Video Of Adarsh Raj Talking About Ram Mandir: ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு, பல வீடியோக்கள் இணையத்தில் ட்ரெண்டானது. இந்த நிலையில், ஒரு சிறுவன் கோயில்கள் கட்டுவது குறித்து பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அயோத்தியில் பிரம்மாண்டமான அளவில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் திறப்பு விழா, நேற்று நடைப்பெற்றது. இதில் அரசியல் கட்சி தலைவர்கள், திரை நட்சத்திரங்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில், ராமர் கோயில் திறப்பு குறித்து ஒரு 13 வயது சிறுவன் கூறியுள்ள கருத்துகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
13 வயது சிறுவனின் வீடியா!
ராமர் கோயில் திறப்பிற்கு, தமிழ் நாடு உள்பட சில தென்னிந்திய மாநில மக்கள், சமூக வலைதளங்களில் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில்தான், ராமர் கோயில் திறப்பு குறித்து 13 வயது சிறுவன் ஆதர்ஷ் ராஜ் பேசியுள்ள வீடியோ வைரலானது. ஒரு பிரபல சேனலின் நிருபர், கோயில் பூசாரி போல இருக்கும் ஒருவரிடம் கோயில் திறப்பு குறித்து கருத்துகளை கேட்டுக்கொண்டிருந்தார். அந்த பூசாரி பதில் கூறிக்கொண்டிருந்த போது, அவருக்கு அருகில் இருந்த சிறுவன், “கோயில்களினால் பிச்சைக்காரர்கள்தான் பெருகுவர்” என்று கூறினான். இதையடுத்து, அவனை அழைத்து பேசிய நிருபர், சில கேள்விகளை கேட்டார். அதற்கு அந்த சிறுவன் மிகவும் துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் பதில் கூறினான்.
“கோயிலுக்கு போவதற்கு பதில், பள்ளிக்கு செல்வேன்..”
“கோயில்களினால் பூஜைகள் நடக்கும் கடவுள் நம்மை ஆசிர்வதிப்பார், ஏன் கோயில்களினால் பிச்சைக்காரர்கள் அதிகரிப்பர் என்று கூறினாய்?” என சிறுவனிடம் அந்த நிருபர் கேள்வி கேட்டார். அதற்கு அந்த சிறுவன், “கடவுள் எதுவும் கொடுப்பதில்லை” என்று கூற, “கடவுள்தான் நமக்கு வேலை கொடுக்கிறார், கல்வி கொடுக்கிறார்” என்கிறார் அந்த நிருபர். அதற்கு அச்சிறுவனோ, “அது நம் கையில்தான் உள்ளது. நாம் கடின முயற்சியுடன் படித்தால், வேலை கிடைக்கிறது, படிக்கவில்லை என்றால் வேலை கிடைக்காது. நாம் பள்ளிக்கு சென்றால்தான் நமக்கு ஏற்ற வேலை கிடைக்கும்” என்று கூறுகிறார். அதனால் நான் கோயிலுக்கு போவதற்கு பதில் பள்ளிக்கே செல்வேன் என்று 13 வயதான ஆதர்ஷ் ராஜ் எனும் அச்சிறுவன் தைரியமாக பதில் கூறுகிறான்.
மேலும் படிக்க | 10 ஆண்டு கால நரேந்திர மோடியின் ஆட்சியில் புனருத்தாரணம் பெற்ற புராதன ஆலயங்கள்!
ஐ.ஏ.எஸ் படிக்கபாேகிறேன்..
கோயிலுக்கு போவதற்கு பதில் பள்ளிக்கு செல்வேன் என அச்சிறுவன் கூறியதை அடுத்து, அந்த நிருபர் அவனிடம் “நீ படிப்பாயா? என்ன படிக்கப்போகிறாய்?” என கேட்கிறார். அதற்கு அந்த சிறுவன், “நான் ஐ.ஏ.எஸ் படிப்பேன், யுபிஎஸ்சிக்கு தயாராவேன்” என்று கூறுகிறான். மேலும், ஐ.ஏ.எஸ் படித்து மாயாவதி போல மக்களுக்கு சேவை செய்வேன் என்றும் அந்த சிறுவன் கூறுகிறான். “பள்ளி முக்கியமா? கோயில்கள் முக்கியமா?” என அந்நிருபர் சிறுவனிடம் கேட்க, அதற்கு அவன், “பள்ளிகள்தான் முக்கியம்” என அடித்து கூறுகிறார். மேலும், கடவுளை கும்பிடுவதற்கு பதில் பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் கும்பிட்டு விட்டு செல்வேன் என கூறும் அச்சிறுவன் கடவுளின் ஆசீர்வாதம் தேவையில்லை என்றும் சொல்கிறான்.
“13 வயதில் எப்படி இவ்வளவு புத்திசாலியாக இருக்கிறாய்?” என அச்சிறுவனை பார்த்து நிருபர் கேள்வி கேட்க, அதற்கு அவர், “ஏனேன்றால் நான் பள்ளிக்கு செல்கிறேன்” என கூறுகிறான் அச்சிறுவன். மேலும், தனது கிராமத்தில் உள்ள யாருமே கோயில்களுக்கு செல்ல மாட்டோம் என்றும், ஒரு கோயில் கூட எங்களது கிராமத்தில் இல்லை என்றும் அச்சிறுவன் கூற, அதற்கு அந்நிருபர், “உனது சாதி என்ன?” என்று கேட்கிறார். அச்சிறுவன், தலீத் சாதியின் பெயர் ஒன்றை குறிப்பிட்டு, தான் அந்த சாதியை சேர்ந்தவன் என பெருமையுடன் கூறினான்.
ராமர் என்ன கொடுத்தார்?
தொடர்ந்து அந்த நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அச்சிறுவன், “பாபாசாகிப் அம்பேத்கர் நமக்கு அரசியலமைப்பை வகுத்து காெடுத்தார், இட ஒதுக்கீட்டை கொடுத்தார், ராமர் என்ன கொடுத்தார்?” என்றும் நெற்றிப்பொட்டில் நச்சென்று அடித்தது போல கேள்வி கேட்டார். இந்த சிறுவனின் துணிச்சல் மிகு பதில்களை தற்போது அனைவரும் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இந்த வீடியோ, சில வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டதாகவும் தற்போது இது ட்ரெண்டாகி வருவதாகவும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். எதுவாக இருப்பினும், இந்த சிறுவன் கூறிய கருத்துகள் பலரை போய் சென்றடைந்துள்ளது.
மேலும் படிக்க | அயோத்தி: பால ராமர் சிலையின் முக்கியமான சிறப்புகள்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ