மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில், காங்கிரஸ் முதலமைச்சர்கள் இன்று பதவியேற்கின்றனர்...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில், காங்கிரஸ் கட்சி வாகை சூடியது. நீண்ட இழுபறிக்கு பின்னர், மூன்று மாநிலங்களுக்கான முதலமைச்சர்களை காங்கிரஸ் தேர்வு செய்து அறிவித்தது.


ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெல்லாட்டும், துணை முதலமைச்சராக சச்சின் பைலட்டும், இன்று காலை 10 மணியளவில், ஜெயப்பூர் ஆல்பர்ட் மண்டபத்தில் நடைபெறும் விழாவில் பதவியேற்க உள்ளனர். 10 ஆயிரம் தொண்டர்கள் நீங்கலாக, முக்கிய விருந்தினர்கள், 2 ஆயிரம் பேர் வரையில் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.


மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத் பதவியேற்கும் விழா, இன்று பிற்பகல் 1.30 மணிக்கு, போபால் ஜம்பூரி மைதானத்தில் நடைபெறுகிறது. முதலமைச்சராக கமல்நாத்துக்கு, ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.


சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல், ராய்ப்பூரில் மாலை 5 மணிக்கு நடைபெறும் விழாவில் பதவியேற்க இருக்கிறார். நீண்ட ஆலோசனைக்கு பின்னர், நேற்று அவரது பெயர் அறிவிக்கப்பட்டது. முதலமைச்சரைத் தவிர மற்ற அமைச்சர்கள் வேறொரு நாளில் பதவியேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.


காங்கிரஸ் முதலமைச்சர்கள் பதவியேற்கும் விழாவில்,கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றக இருக்கிறார். பல்வேறு மாநில முதலமைச்சர்கள், கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச முதலமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அம்மாநிலங்களுக்கு செல்கிறார்.