‘கணபதி பப்பா மோர்யா’ கோஷங்களுக்கிடையே 18 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்ட மொகம்மத்!!
மகத் நகரில் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவத்தில், இடிபாடுகளில் சிக்கித் தவித்த நான்கு வயது குழந்தை முகம்மத் என் பாங்கி வெற்றிகரமாக, பாதுகாப்பாக வெளியே எடுக்கப்பட்டார். இது மக்களிடையே உற்சாகம் மற்றும் நம்பிக்கைக்கான அலையை உண்டாக்கியது.
ராய்காட்: ராய்கட்டில் (Raigad) ஏற்பட்ட கட்டிட இடிபாட்டில் சிக்கியவர்களைக் கண்டறிந்து மீட்டெடுப்பதற்காக NDRF, SDRF ராய்காட் போலீஸ் மற்றும் மகத் தீயணைப்புப் படையின் குழுக்கள் நம்பிக்கையோடு பணியில் ஈடுபட்டிருந்தனர். செவ்வாய்க்கிழமை அதிகாலை, மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் இரண்டு உடைந்த தூண்களுக்கு இடையில் ஒரு சிறிய கால் அசைவதைக் கண்டறிந்தனர். சுற்றிலும் அதிக அளவில் இடிபாடுகள் இருந்தன. ஒரு NDRF பணியாளர் சிக்கியிருந்த குழந்தையை வெளியே இழுக்க விரைந்தார்.
சரியாக அதே நேரத்தில், உள்ளே இருந்த முகம்மத் என்ற அந்த சிறுவன் அழுகையுடன் பதிலளித்தார். அந்த அழுகை குழந்தை உயிருடன் இருப்பதையும் நலமாக இருப்பதையும் அனைவருக்கும் சுட்டிக்காட்டும் விதத்தில் இருந்தது என்று அந்த இடத்தில் இருந்த ராய்கட் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அணிகள் உடனடியாக செயல்பட்டு மெட்டல் கட்டர்களைப் பயன்படுத்தி, தூண்களை கவனமாக வெட்டியெடுத்தனர். பின்னர், ஜெ.சி.பி இயந்திரங்கள் கொண்டு சுற்றியிருந்த இடிபாடுகளை மெதுவாக அகற்றி, பீதியில் அழுது கொண்டிருந்த குழந்தையை அடைந்தனர்.
NDRF பணியாளர்கள் அந்த சிறுவனை, இருண்ட துளையிலிருந்து வெளியே தூக்கினர். முகம்மத் என்ற அந்த சிறுவன் இறுதியாக வெளியே எடுக்கப்பட்டு சூரிய ஒளியைக் கண்டார். வெளியே வந்ததும் திகைத்து, கண்களை சிமிட்டி, பின்னர், நிம்மதியுடனும் மகிழ்ச்சியுடனும் அழுத அச்சிறுவன், 'அம்மி' 'அப்பு' என்று தன் தாய் மற்றும் தந்தையைத் தேடத் துவங்கினார்.
"'மிராக்கிள் பாய் (Miracle Boy)" அதாவது “அதிசய சிறுவன்” உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். அவர் கடவுளின் குழந்தை "என்று முகமதுவின் பாதுகாப்பான மீட்புக்குப் பிறகு NDRF இயக்குநர் ஜெனரல் சத்ய நாராயண் பிரதான் கூறினார்.
செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில், ராய்கட் மாவட்ட அதிகாரிகள் முகம்மதுவின் தாய் நௌஷீன், 30, சகோதரிகள் ஆயிஷா, 7, மற்றும் ருகையா, 2, ஆகியோர் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர் என்பதை உறுதிப்படுத்தினர். இருப்பினும் மற்ற குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை.
சுற்றி கூடியிருந்த மக்கள், வீரர்கள் அச்சிறுவனை தூக்கியெடுத்து, அச்சிறுவன் வெளியே வந்த முதல் காட்சியைக் கண்டவுடன், அச்சிறுவன் மற்றும் அவரை பாதுகாப்பாக மீட்டெடுத்த வீர்ரகள் என அனைவருக்ககவும் கை தட்டி தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.
அங்கு வந்தவர்களில் சிலருக்கு கண்களில் ஆனந்தக் கண்ணீர் பொங்கியது. சிலர் 'கணபதி பப்பா மோரியா' என்று கோஷமிட்டு சிறுவனை நல்லபடியாக மீட்டுக்கொடுத்ததற்காக விநாயகருக்கு நன்றி தெரிவித்தனர். மாநிலம் முழுவதும் கணேஷோத்சவ கொண்டாட்டங்களும் முஹர்ரமும் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.
சிறுவன் இடுபாடுகளால் உருவான படுகுழியில் சுமார் 18 மணிநேரங்களை, உணவு, தண்ணீர் இல்லாமல் அருகில் ஆறுதல் கூறவும் ஆளில்லாமல் இருளில் கழித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முகமது உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு ஒரு சில காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. மருத்துவர்கள் அவரை குளிக்க வைத்து, உணவு அளித்து கண்காணித்து வருகின்றனர்.
ALSO READ: மகாராஷ்டிராவில் 5 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது...!!!
மகத் நகரம் (Mahad Town)- சுமார் 22,000 மக்கள்தொகை கொண்டது. இதில் சுமார் 5,000 முஸ்லிம்கள் உள்ளனர். திங்கள்கிழமை மாலை கட்டிடம் நொடியில் நொறுங்கி விழுந்தது முதல் இந்த நகரமே ஸ்தம்பித்துள்ளது.
இந்த கட்டிடத்தில் சுமார் 100 பேர் வசித்து வந்தனர், அதில் சுமார் 8 பேரின் சடலங்கள் வெளியே எடுக்கப்பட்டுள்ளது. 8 பேர் காயமடைந்தனர். முகமது உட்பட மீதமுள்ளவர்கள் மீட்கப்பட்டனர்.
அனைத்து தேசிய, மாநில மற்றும் உள்ளூர் மீட்புக் குழுக்களின் அயராத மற்றும் வைராக்கியமான முயற்சிகளுக்கு உள்ளூர்வாசிகள் அவர்களைப் பாராட்டினர். அவர்கள் பாதிக்கப்பட்டவர்களைத் தேடி மீட்டெடுக்க எந்த ஒரு சிறு வாய்ப்பையும் தவறவிடவில்லை என அனைவரும் மீட்புப் பணியாளர்களைப் புகழ்ந்தனர்.