புதுடெல்லி: தலைநகரில் போக்குவரத்து நெரிசல் மற்றும் மாசுபாட்டைக் குறைப்பதற்காக வாகன கட்டுப்பாடு திட்டம் வரும் நவம்பர் 4 முதல் நவம்பர் 15 வரை தேசிய தலைநகரான டெல்லியில் நடைமுறையில் இருக்கும் எனவும் அரசு அறிவித்துள்ளது. தற்போது மற்றொரு முயற்சியாக அரசு அலுவலகங்களுக்கான நேரங்களை மாற்ற தில்லி அரசு முடிவு செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மொத்தம் 42 அரசு அலுவலகங்களின் வேலை நேரம் மாற்றப்பட்டு உள்ளது. அதில் 21 அலுவலக நேரங்கள் காலை 9:30 முதல் மாலை 6 மணி வரையும், மீதமுள்ள அலுவலகங்களில் காலை 10:30 முதல் இரவு 7 மணி வரை பணி நேரம் இருக்கும் எனக் கூறப்பட்டு உள்ளது. புதிய அலுவலக பணி நேரங்கள் நவம்பர் 4 முதல் 15 வரை மட்டுமே பொருந்தும் என்று உத்தரவில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.


 



உத்தியோகபூர்வ உத்தரவுப்படி, நிர்வாக, சீர்திருத்தங்கள், சுற்றுச்சூழல், மின்சாரம், திட்டமிடல் தணிக்கை, நிதி மற்றும் பிற 21 அரசுத்துறைகள் காலை 9:30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். வீடு, நகர அபிவிருத்தி, முதன்மை கணக்கு அலுவலகம், வழக்கு, போக்குவரத்து, உயர் கல்வி, தகவல் மற்றும் விளம்பரம் போன்ற 21 துறைகள் காலை 10:30 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


இருப்பினும், தேசிய தலைநகரில் உள்ள தனியார் அலுவலகங்கள் அரசாங்க உத்தரவின் கீழ் வராது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.