கடந்த நான்கு மாதங்களாக வீட்டு காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து அரசியல் தலைவர்களை ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் விடுவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஸ்ரீநகரில் உள்ள MLA ஹாஸ்டலில் தலைவர்கள் தடுத்து வைக்கப்பட்டு இருந்த்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநில நிர்வாகத்தால் விடுவிக்கப்பட்டவர்களில் - இரண்டு முன்னாள் PDP சட்டமன்ற உறுப்பினர்கள், இரண்டு முன்னாள் தேசிய மாநாட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒரு முன்னாள் சுதந்திர சட்டமன்ற உறுப்பினர் அடங்குவர்.


இந்நிலையில் தற்போது விடுவிக்கப்பட்ட தலைவர்கள் PDP தலைவர்கள் ஜாகூர் மிர் மற்றும் பஷீர் அஹ்மத் மிர், தேசிய மாநாட்டுத் தலைவர் குலாம் நபி பட் மற்றும் முன்னாள் சுதந்திர சட்டமன்ற உறுப்பினர் யாசிர் ரேஷி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 5-ஆம் நாள் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து அளிக்கும் சட்டப்பிரிவு 370-னை மத்திய அரசு நீக்குவதாக அறிவித்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்பை அடுத்து., அமைதி முறையை மனதில் வைத்து பள்ளத்தாக்கின் அரசியல் தலைவர்களை அரசாங்கம் வீட்டுக் காவலில் வைத்திருந்தது. இது காஷ்மீர் மீதான அரசாங்கத்தின் கடுமையான அணுகுமுறையைக் காட்டுகிறது என விமர்சனங்கள் எழுந்தன.


எதிர்க்கட்சிகளிடமிருந்து பல்வேறு விமர்சனங்களை பெற்றபோதிலும், அரசாங்கம் தனது படியிலிருந்து பின்வாங்கத் தயாராக இல்லை. தொடர்ந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது, குறிப்பாக முன்னாள் முதல்வரும், மூத்த மாநிலத் தலைவருமான ஃபாரூக் அப்துல்லா மீது பொது பாதுகாப்பு சட்டத்தை கொண்டுவந்தது அரசாங்கத்தின் தனிச்சிறப்பு.


ஒரு நபர் எவ்வளவு செல்வாக்கு மிக்கவராக இருந்தாலும், அவர் காஷ்மீரில் சட்டம் ஒழுங்கை மீறினால் அல்லது மக்களைத் தூண்ட முயன்றால், அவருக்கு எதிராக பொது பாதுகாப்பு சட்டம் (PSA) விதிக்கப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்திடம் தெளிவாகக் கூறியுள்ளது. அரசாங்க வட்டாரங்களின்படி, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பிரிவினைவாத தலைவர்கள் மற்றும் கூறப்படும் சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள் மீது பொது பாதுகாப்பு சட்டம் வரவிருக்கும் காலங்களில் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில் தற்போது தலைவர்களின் விடுதலை, காஷ்மீரில் இயல்புநிலையை மீண்டும் கொண்டுவருவதற்கான ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்தின் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.