டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வின் பாதுகாப்பு வாகனம் மீது நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு, கடந்த 8ந்தேதி நடந்தது.  இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இந்த தேர்தல் முடிவில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 60க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்று வெற்றி பெற்றுள்ளது.


இந்த தேர்தலில் மெஹ்ராலி தொகுதியில் இருந்து புதிய எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுரேஷ் யாதவ் தனது ஆதரவாளர்களுடன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு நேற்றிரவு வீடு திரும்பி கொண்டு இருந்துள்ளார். அவரது வாகனம் டெல்லியின் தென்மேற்கில் கிஷன்கார் கிராமத்தில் வந்தபொழுது, மர்ம நபர்கள் சிலர் அவருடைய பாதுகாப்பு வாகனம் மீது 7 முறை துப்பாக்கிகளால் சுட்டுள்ளனர். இதில் அசோக் மன் என்ற தொண்டர் ஒருவர் கொல்லப்பட்டார்.  மற்றொருவர் காயமடைந்து உள்ளார். 


 



 


இந்நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்டவர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். தேர்தலில் வெற்றிபெற்ற முதல் நாளே ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.