எஸ்.எஃப்.ஐ அமைப்பைச் சேர்ந்த மாணவர் கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்டதைக் கண்டித்து கேரளாவில் அனைத்து கல்லூரிகளிலும் வகுப்புகளை புறக்கணிப்புப் போராட்டம்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொச்சி மகாராஜா கல்லூரியில், எஸ்.எஃப்.ஐ அமைப்பைச் சேர்ந்த மாணவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று கேரள மாநிலத்தில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


கேரளா மாநில கல்லூரிகளில் பல்வேறு அமைப்புகளை கொண்ட மாணவர்கள் மோதிக்கொள்ளும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில், கல்லூரிகளுக்கு புதிதாக வரும் மாணவர்களை வரவேற்க கொச்சி மகாராஜா கல்லூரியில் எஸ்.எஃப்.ஐ மற்றும் கேம்பஸ் ஃப்ரென்ட் ஆகிய அமைப்பு மாணவர்கள் போட்டிபோட்டு சுவர் விளம்பரம் செய்துள்ளனர். அதில், கேம்பஸ் ஃப்ரென்ட் அமைப்பினர் எழுதிய சுவர் விளம்பரத்தில், எஸ்.எஃப்.ஐ அமைப்பினர் 'மதவாத கேம்பஸ் ஃப்ரென்ட்' என மாற்றி எழுதியிருக்கிறார்கள். 


இதனால் ஆத்திரமடைந்த கேம்பஸ் ஃப்ரென்ட் அமைப்பினர், எஸ்.எஃப்.ஐ-யின் இடுக்கி மாவட்டக்குழு உறுப்பினர் அபிமன்யூ (வயது-20) மற்றும் அர்ஜூன் (வயது-19) ஆகியோரை நேற்று நள்ளிரவு கத்தியால் குத்தியுள்ளனர். இதையடுத்து, அபிமன்யூ மருத்துவமனைக்குச் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். 


படுகாயம் அடைந்த அர்ஜூன், மெடிக்கல் ட்ரஸ்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழந்த அபிமன்யூ, கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவந்தார்.  எஸ்.எஃப்.ஐ அமைப்பின் விளம்பரங்களை கேம்பஸ் ஃப்ரென்ட் அமைப்பினர் சேதப்படுத்த முயன்றதால் இந்தப் பிரச்னை ஏற்பட்டதாக எஸ்.எஃப்.ஐ  அமைப்பினர் தெரிவித்துள்ளனர். 



இது தொடர்பான வழக்கில், கேம்பஸ் ஃப்ரென்ட் அமைப்பைச் சேர்ந்த 3 பேரை காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், 11 பேரைத் தேடிவருகின்றனர். மாணவர் கொலையைக்  கண்டித்து, கேரள மாநிலம் முழுவதும் வகுப்புகளை முடக்கும் போராட்டத்தை எஸ்.எஃப்.ஐ அறிவித்துள்ளது.