ஆப்ரிக்க நாடு சுற்றுப்பயணம்: மபுட்டோ சென்றடைந்தார் பிரதமர்.
ஆப்ரிக்க நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று அதிகாலை மபுட்டோ நகருக்கு சென்றடைந்தார்.
ஆப்பிரிக்க நாடுகளுடன் நட்புறவை பேணுவதில் இந்தியா மிகுந்த அக்கறை கொண்டு உள்ளது. பல்வேறு ஆப்பிரிக்க நாடுகள் இந்தியாவுடன் மிக நெருங்கிய வர்த்தக உறவை கொண்டு உள்ளன. இதை மேலும் வலுப்படுத்தும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் 11-ம் தேதி வரை 5 நாட்கள் மொசாம்பிக், தென் ஆப்பிரிக்கா, தான்சானியா, கென்யா ஆகிய 4 நாடுகளில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார்.
நேற்றிரவு தனது ஆப்பிரிக்க நாடுகள் பயணத்தை தொடங்கிய மோடி, இன்று அதிகாலை மொசாம்பிக் தலைநகர் மபுட்டோ சென்றடைந்தார்.இயற்கை எரிவாயுவை ஏற்றுமதி செய்வதில் உலகின் 3-வது மிகப் பெரிய நாடாக திகழும் மொசாம்பிக்கிற்கு பிரதமர் பயணம் செய்வது இதுவே முதல் முறையாகும். இன்று நடக்கவிருக்கும் நிகழ்ச்சியில், அந்நாட்டு அதிபர் பிளிபி நியூஸியை சந்திக்கும் மோடி, அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு செல்கிறார்.