நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம், இன்றிரவு முதல் தற்காலிகமாக அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விமான போக்குவரத்து துறையில் தனியார் நிறுவனங்களின் போட்டி மனப்பான்மை காரணமாக பயணிகளுக்கு ஆதரவாக சில நிறுவனங்கள் கட்டணங்களை குறைத்தும், சிறப்பு சலுகைகளை அறிவித்தும் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுத்தன.
 
இந்த தொழில் போட்டியில் கிங் பிஷர் உள்ளிட்ட சில நிறுவனங்கள் கடுமையான இழப்பை சந்தித்தன. அவ்வகையில், தற்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது.


இதன் காரணமாக வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து குத்தகை அடிப்படையில் வாங்கி இயக்கும் பல விமானங்களுக்கான வாடகை பாக்கியை செலுத்த முடியாமல் ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் கடன் வைத்துள்ளது.  நூற்றுக்கும் அதிகமான விமானங்களை வைத்துள்ள ஜெட் ஏர்வேஸ் பல விமானங்களை இயக்காமலும் நிறுத்தி விட்டது. 
இந்நிறுவனத்தின் 16 வழித்தடங்கள் மட்டுமே தற்போது இயக்கத்தில் உள்ளன. இதுதவிர, வேறுசில காரணங்களுக்காக மேலும் பல விமானச் சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது.


போதிய நிதி இல்லாததால் அந்நிறுவனத்தின் விமானிகள், பொறியாளர்கள் மற்றும் பணிப்பெண்களுக்கான மாத ஊதியத்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து குறிப்பிட்ட தேதியில் வழங்காமல் நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது.


சுமார் 8,000 கோடி ரூபாய் கடன் சுமையில் சிக்கித்தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் திக்குமுக்காடி வருகிறது. மீண்டும் தலை நிமிரும் வகையில் புத்துயிர் அளிக்க 10,000 கோடி ரூபாய்வரை தேவைப்படுகிறது.


இந்நிலையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் இன்றிரவில் இருந்து தற்காலிகமாக அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. வங்கியில் இருந்து கிடைக்க வேண்டிய தொகை உடனடியாக கிடைக்காததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.