அகிலேஷ் தான் அடுத்த முதல்-மந்திரி: முலாயம்சிங் யாதவ்
புதுடெல்லி: சமாஜ்வாடி கட்சி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் அகிலேஷ் யாதவ் தான் முதல்-மந்திரியாக பதவி ஏற்பார் என முலாயம்சிங் யாதவ் தெரிவித்தார்.
உ.பி., மாநிலத்தில் ஆளுங்கட்சியான சமாஜ்வாடி கட்சியில் தேசிய தலைவர் முலாயம்சிங் யாதவுக்கும், அவரது மகன் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவுக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு கட்சியில் பிளவை ஏற்பட்டது.
அடுத்த மாதம் முதல் அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் யாருக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்குவது என்பது தொடர்பாக தேர்தல் கமிஷன் இருவரிடமும் பெரும்பான்மை ஆதரவை கேட்டது.
அகிலேஷ் யாதவ் தரப்பு பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஆதரவு கடிதத்தை ஏற்கனவே தேர்தல் கமிஷனிடம் கொடுத்து தங்களுக்கே சைக்கிள் சின்னம் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது.
முலாயம்சிங் தனது சகோதரர் சிவ்பால்சிங் யாதவ், நீண்டநாள் கூட்டாளி அமர்சிங் ஆகியோருடன் நேற்று தேர்தல் கமிஷனை சந்தித்தார். அகிலேஷ் முதல்-மந்திரி மட்டுமே, தானே கட்சியின் தேசிய தலைவராக இருப்பதால் தனக்கு தான் சைக்கிள் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
தேர்தல் கமிஷனை சந்தித்த பின்னர் முலாயம்சிங் நிருபர்களிடம் கூறும்போது:-
சமாஜ்வாடி கட்சியில் எந்த பிளவும் இல்லை. அப்படி ஏதாவது பிரச்சினை இருந்தால், நான் எனது மகனுடன் பேசி அதனை தீர்க்க முயற்சிப்பேன். என்று தெரிவித்தார்.
சமாஜ்வாடி கட்சி தேர்தலில் வெற்றி பெற்றால் அகிலேஷ் யாதவ் தான் முதல்-மந்திரியாக பதவி ஏற்பார். நாங்கள் விரைவில் இணைந்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்வோம் என்றார்.
ராம்கோபால் யாதவ் 6 வருடங்களுக்கு கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் முலாயம் கூறினார். பாராளுமன்ற மேல்சபை தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஹமீது அன்சாரிக்கு முலாயம்சிங் நேற்று ஒரு கடிதம் அனுப்பினார். அதில், எம்.பி.யும், மேல்சபை கட்சித் தலைவருமான ராம்கோபால் யாதவ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனாலும் புதிய தலைவர் யார் என முலாயம் அதில் குறிப்பிடவில்லை.
பின்னர் அகிலேஷ் ஆதரவாளரான ராம்கோபால் யாதவும் நேற்று தேர்தல் கமிஷனை சந்தித்தார்.
அகிலேஷ் கூறும்போது:-
ஜனவரி 17-ம் தேதி முதல்கட்ட தேர்தலுக்கான அறிக்கை வெளியாகிறது. எனவே கட்சியின் சைக்கிள் சின்னம் ஒதுக்குவதில் விரைவாக முடிவு எடுக்கும்படி தேர்தல் கமிஷனை வலியுறுத்தி உள்ளோம் என்றார்.