டெல்லியில் அமர் ஜவான் ஜோதி, தேசிய போர் நினைவுச்சின்ன சுடருன் இணைகிறது, காரணம் இதுதான்
ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைத் தலைவர் ஏர் மார்ஷல் பாலபத்ரா ராதா கிருஷ்ணா, அமர் ஜவான் ஜோதியை தேசியப் போர் நினைவிடத்தில் உள்ள நித்திய சுடருடன் இனைப்பார்.
புதுடெல்லி: பல வித போராட்டங்களுக்கு, தியாகங்களுக்குப் பிறகு நமது நாடு 1947 ஆண்டு விடுதலை பெற்றது. விடுதலைக்கு பின்னரும் நம் நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஒற்றுமைக்காக பல வித தியாகங்களை பலர் தினமும் செய்துகொண்டுதான் இருக்கின்றனர். அப்படிப்பட்ட தியாகங்களின் சின்னங்களாய் இருப்பவை அமர் ஜவான் ஜோதி மற்றும் தேசிய போர் நினைவுச்சின்னம் ஆகியவை!!
1971 போருக்குப் பிறகு 1972 இல் அமர் ஜவான் ஜோதி ஏற்றப்பட்டது. டெல்லியின் இந்தியா கேட்டில் ஏற்றப்பட்டுள்ள இந்த ஜோதி 1914-1921 க்கு இடையில் உயிர் தியாகம் செய்த பிரிட்டிஷ் இராணுவ வீரர்களுக்கும் மரியாதை செலுத்துகிறது. சுதந்திர இந்தியாவுக்காக பாகிஸ்தான், சீனா, இலங்கை ஆகிய நாடுகளுக்கு எதிராகவும், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் போராடி வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தேசிய போர் நினைவுச்சின்னம் (National War Memorial) மரியாதை செலுத்துகிறது.
இன்று 1554 மணி நேரத்தில், ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைத் தலைவர் ஏர் மார்ஷல் பாலபத்ரா ராதா கிருஷ்ணா, அமர் ஜவான் ஜோதியை தேசியப் போர் நினைவிடத்தில் உள்ள நித்திய சுடருடன் இணைப்பார்.
சவுத் பிளாக் அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்தியா கேட்டில் உள்ள அமர் ஜவான் ஜோதியில் சிஐஎஸ்சி வருகையுடன் பிற்பகல் 3:30 மணிக்குத் தொடங்கும் இந்த விரிவான விழாவில் ஜோதிகள் ஒன்றிணைக்கப்படும். அமர் ஜவான் ஜோதியின் சுடர் ஒரு டார்சில் தேசிய போர் நினைவகத்திற்கு காவலர் குழுவுடன் கொண்டு செல்லப்பட்டு இரண்டு சுடர்களும் ஒன்றிணைக்கப்படும்.
ALSO READ | 75 ஆண்டுகளில் முதன்முறையாக குடியரசு தின அணிவகுப்பு 30 நிமிடங்கள் தாமதமாக தொடங்கும்!
1971 இந்திய-பாகிஸ்தான் போருக்குப் பிறகு 1972 இல் அமர் ஜவான் ஜோதி இந்தியா கேட்டில் ஏற்றப்பட்டது. இந்தியா கேட், முதல் உலகப் போரில், பிரான்ஸ், ஃபிளாண்டர்ஸ், மெசபடோமியா, பெர்சியா, கிழக்கு ஆப்பிரிக்கா, கலிபோலி மற்றும் மூன்றாம் ஆப்கான் போர் ஆகியவற்றில் உயிர் தியாகம் செய்த பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தின் 90,000 வீரர்களின் நினைவகமாக உள்ளது. அமர் ஜவான் ஜோதி அமரர்களாக இருக்கும் வீரர்களையும், இந்தியா கேட் காலனித்துவ இந்தியாவையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.
பிப்ரவரி 25, 2019 அன்று திறக்கப்பட்ட தேசிய போர் நினைவுச்சின்னம், சுதந்திர இந்தியாவுக்காக பல வித போர்களில் பங்கேற்ற இந்திய ராணுவ வீரர்களை கவுரவித்து, பிரதிநிதித்துவப்படுத்துகிறது. பாகிஸ்தான் (Pakistan) மற்றும் சீனாவுடனான மோதல்கள் மற்றும் 1961 ஆம் ஆண்டு நடந்த கோவா போர், இலங்கையில் நடந்த ஆபரேஷன் பவன் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் நடந்த ரக்ஷக் உள்ளிட்ட பிற நடவடிக்கைகளின் போது கொல்லப்பட்ட ஆயுதப்படை வீரர்களின் பெயர்கள் நினைவுச்சின்னத்தில் பொன் எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம், அமரர்களான இந்த வீர்ரகளுக்கு அவர்களது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களும் பொதுமக்களும் மரியாதை செலுத்த முடியும்.
இரண்டு போர் நினைவுச் சின்னங்கள் ஒன்றுக்கொன்று அருகாமையில் இருக்கக்கூடாது என்பதாலும், சுதந்திர இந்தியாவையும் அமரர்களான வீரர்களையும் தேசிய போர் நினைவுச்சின்னம்தான் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதாலும், இரண்டு ஜோதிகளையும் ஒன்றிணைக்க முடிவு எடுக்கப்பட்டது.