லோக்பால் சட்டத்தை கொண்டுவர வலியுறுத்தி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே இன்று முதல் உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்கிறார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காந்தியவாதியும், சமூக ஆர்வலருமான அன்னா ஹசாரே மத்தியில் லோக்பால் சட்டத்தை கொண்டு வரவும், மாநிலங்களில் லோக் ஆயுக்தாவை நியமிக்க வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறார். முன்னதாக லோக் ஆயுக்தாவை அமைக்காவிட்டால் காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2-ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்துவேன் என அறிவித்தார்.


பின்னர் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பிரதிநிதியாக மராட்டிய அமைச்சர் கிரிஷ் மகாஜன், அன்னா ஹசாரேவை சந்தித்து அரசு எடுத்து வரும் நடவடிக்கை குறித்து விளக்கியதை தொடர்ந்து, தனது காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை ஒத்திவைத்தார்.


எனினும் லோக்பால் கொண்டுவர மத்திய அரசு தாமதம் செய்தால் காந்தி நினைவு நாளான ஜனவரி 30-ஆம் தேதி போராட்டம் நடத்துவேன் என அறிவித்திருந்தார். அதன்படி, லோக்பால் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி மகாராஷ்டிராவின் ரலேகானில் சித்தியில் இன்று முதல் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அன்னா ஹசாரே அறிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் தெரிவிக்கையில்., பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் ஆகியும் லோக்பால் சட்டம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏதும் நிகழவில்லை. ஊழலுக்கு எதிரான மசோதாவை கொண்டு வரவேண்டும் என மோடி எண்ணியிருந்தால் அதற்காக 5 ஆண்டுகள் காத்திருக்க மாட்டார்.


எனவே, லோக்பால் சட்டம் கொண்டு வர வலியுறுத்தி எனது சொந்த கிராமமான ரலேகான் சிந்தியில் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன் என தெரிவித்துள்ளார். மேலும் தனது உண்ணாவிரதம் எந்த கட்சியையும் எதிர்த்தோ மற்றும் தனிப்பட்ட நபரை எதிர்த்தோ நடத்தப்படவில்லை எனவும் நாட்டின் நலனுக்காக நடைபெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.