முன்னாள் மத்திய அமைச்சர் ஜேட்லியின் உடல் முழு மரியாதையுடன் தகனம்..
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியின் உடல் யமுனை நதிக்கரையோரம் அமைந்துள்ள நிகாம்பாத் காட் மயானத்தில் தகனம் !
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியின் உடல் யமுனை நதிக்கரையோரம் அமைந்துள்ள நிகாம்பாத் காட் மயானத்தில் தகனம் !
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அருண் ஜேட்லி, கடந்த ஒன்பதாம் தேதி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரு வாரங்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று நண்பகல் 12 மணியளவில் உயிர் பிரிந்தது. இதையடுத்து அவரது உடல், டெல்லி கைலாஷ் காலனியின் உள்ள இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அருண் ஜேட்லியின் உடலுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து இன்று காலை 10 மணி அளவில் அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, பண்டிட் தீன்தயாள் உபத்யாயா மார்க் பகுதியில் உள்ள பாஜக தலைமையகம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு, பாஜக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். அருண் ஜேட்லியின் இறுதி ஊர்வலம் 1 மணிக்குத் தொடங்கியது. யமுனை நதிக் கரையை ஒட்டியுள்ள நிகாம்பாத் காட் (nigambodh ghat) மயானத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு முழு அரசு மரியாதையுடன், இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் உடல் தகனம் செய்யப்பட்டது.