ஆம் ஆத்மி கட்சியை ஒழிக்க பிரதமர் மோடி விரும்புகிறார் -அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்
PM Vs Arvind Kejriwal: ஆம் ஆத்மி அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மீதான அனைத்து வழக்குகளும் ஆதாரமற்றவை. பிரதமர் மோடிக்கு நான் மீண்டும் சவால் விடுகிறேன் -அரவிந்த் கெஜ்ரிவால்.
Delhi News: பிரதமர் நரேந்திர மோடி ஆம் ஆத்மி கட்சியை ஒழிக்க நினைக்கிறார் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (அக்டோபர் 11, புதன்கிழமை) தெரிவித்துள்ளார். எங்கள் எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி தலைவர்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. எங்கள் மீது இதுவரை 170 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எங்களுக்கு சாதகமாக 140 வழக்குகளில் தீர்ப்பு வந்துள்ளன. அதில் ஒரு பைசா கூட ஊழல் கண்டு பிடிக்கப்படவில்லை. எதிர்க்கட்சிகளை பயமுறுத்தவும், தொந்தரவு செய்வதும் தான் பாஜகவின் நோக்கம் என கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர்களை தொந்தரவு அளிப்பது தான் பாஜகவின் நோக்கம் - கெஜ்ரிவால்
ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் மீது போலி வழக்கு பதிவு செய்யப்படுகிறது. ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக அமலாக்கத்துறையிடம் எந்த ஆதாரமும் இல்லை. மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் ஆதாரங்களைத் அவர்களால் (அமலாக்கத்துறை) சமர்ப்பிக்க முடியவில்லை. தற்போது சஞ்சய் சிங்கை கைது செய்துள்ளனர். ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ அமனத்துல்லா கான் (Amanatullah Khan) தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். அங்கும் ஒரு பைசா ஊழல் கூட கண்டு பிடிக்கப்படவில்லை. ஊழல் தலைவர்கள் பாஜகவில் இணைகிறார்கள் என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.
ஆம் ஆத்மியை அழிக்க பிரதமர் முயற்சிக்கிறார் -கெஜ்ரிவால்
நாட்டின் சூழலை பிரதமர் நரேந்திர மோடி கெடுத்துவிட்டதாக கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். மோடியின் நடத்தை மற்றும் வார்த்தைகளில் ஆணவம் உள்ளது. அவரைப் பார்த்து பயப்படுகிறார்கள். ஆம் ஆத்மியை நசுக்க பிரதமர் தன்னால் இயன்றவரை முயற்சி செய்து வருகிறார். 2015ல் எங்கள் அரசு அமைந்தவுடன், ஷுங்லு கமிட்டி அமைக்கப்பட்டு, 400 கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டும், அதில் முறைகேடுகள் எதுவும் கண்டறியப்படவில்லை. இதுவரை வந்த அனைத்து தீர்ப்புகளிலும் எங்களுக்கு எதிராக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.
நான் கொல்லப்பட்டால் யார் பொறுப்பு? சஞ்சய் சிங்
மதுபானக் கலால் கொள்கை ஊழல் வழக்கில் கைதான ஆம் ஆத்மி ராஜ்யசபா எம்பி சஞ்சய் சிங்கின் காவலை அக்டோபா் 13 ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டது.
விசாரணை என்ற பெயரில் நான் வேறு எங்கோ அழைத்துச் செல்லப்படுவதாகவும், நான் கொல்லப்பட்டால் யார் பொறுப்பு? என நீதிமன்றத்தில் சஞ்சய் சிங் தெரிவித்தார். ஆனால் சஞ்சய் சிங்கின் குற்றச்சாட்டுகளை அமலாக்கத் துறை மறுத்தது. இதனையடுத்து நீதிமன்றக் காவலை நீட்டித்தபோது, நீதிமன்றத்திற்குத் தெரிவிக்காமல் சஞ்சய் சிங்கை அமலாக்கத் துறை எங்கும் அழைத்துச் செல்ல கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆம் ஆத்மி கட்சியின் மூன்று பெரிய தலைவர்கள் கைது
தற்போது ஆம் ஆத்மி கட்சியின் மூன்று பெரிய தலைவர்கள் இருவேறு வழக்குகளில் காவலில் மற்றும் சிறையில் உள்ளனர். இந்த தலைவர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சத்யேந்திர ஜெயின், மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சிபிஐ காவலில் உள்ள மணீஷ் சிசோடியா மற்றும் அமலாக்கத்துறையின் காவலில் உள்ள சஞ்சய் சிங் ஆவார்கள்.
மேலும் படிக்க - கெஜ்ரிவால் போட்ட திடீர் குண்டு... பீகார் எதிர்கட்சிகளின் கூட்டத்தில் நடந்தது என்ன?
31 மே 2022 அன்று முன்னாள் சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கைது
மே 31, 2022 அன்று, முன்னாள் டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் (Satyendra Jain) அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். 24 ஆகஸ்ட் 2017 அன்று சிபிஐ பதிவு செய்த எஃப்ஐஆர் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. டெல்லியில் பல ஷெல் நிறுவனங்களை வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. கொல்கத்தாவைச் சேர்ந்த 3 ஹவாலா ஆபரேட்டர்களிடம் இருந்து 54 ஷெல் நிறுவனங்கள் மூலம் ரூ.16.39 கோடி மதிப்பிலான கருப்புப் பணம் மாற்றப்பட்டதாக புகார்.
அதன்பிறகு அவர் திகார் சிறைக்கு அனுப்பப்பட்டார். தற்போது சத்யேந்திர ஜெயின் உடல்நலக்குறைவு காரணமாக அக்டோபர் 18 ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீனில் உள்ளார். அவரது வழக்கமான ஜாமீன் மனு மீதான விசாரணை அக்டோபர் 18 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.
26 பிப்ரவரி 2023 அன்று டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது
டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா (Manish Sisodia) கடந்த மார்ச் 10 ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதற்கு முன், பிப்ரவரி 26 ஆம் தேதி சிபிஐயால் கைது செய்யப்பட்டார். இரு அமைப்புகளும் சிசோடியாவை டெல்லி மதுபான ஊழல் வழக்கில் குற்றவாளியாக்கி உள்ளன. சிசோடியா மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிபிஐயும், பணமோசடி சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்தது.
அக்டோபர் 2023 அன்று ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் கைது
டெல்லி மதுபானக் கலால் கொள்கை வழக்கின் குற்றப்பத்திரிகையில் சஞ்சய் சிங்கின் பெயரும் உள்ளது. பணமோசடி குற்றச்சாட்டின் பேரில் அவர் அக்டோபர் 4 ஆம் தேதி சஞ்சய் சிங் (Sanjay Singh) கைது செய்யப்பட்டார். இந்த ஆண்டு ஜனவரியில் சஞ்சய் சிங்கின் பெயரை குற்றப்பத்திரிகையில் அமலாக்கத்துறை சேர்த்தது. மதுபானக் கலால் கொள்கை ஊழல் வழக்கில் அரசாங்க சாட்சியாக மாறிய குற்றம் சாட்டப்பட்ட தினேஷ் அரோரா, சஞ்சய் சிங்கிற்கும் டெல்லியின் பார்-ரெஸ்டாரண்ட் உரிமையாளர்களுக்கும் இடையே ஒரு சந்திப்பு நடந்ததாகக் கூறினார். இதனையடுத்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
PMLA இன் கீழ் அமானதுல்லா கான் மீது FIR பதிவு
அக்டோபர் 10 ஆம் தேதி, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ், ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானதுல்லா கான் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் தொடர்புடைய டெல்லியில் 13 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. 2018-2022 ஆம் ஆண்டு டெல்லி வக்ஃப் வாரியத்தின் தலைவராக அமனதுல்லா கான் பதவி வகித்த போது, டெல்லி வக்ஃப் வாரியத்தில் முறைகேடாக நியமனம் நடந்ததாகவும் மற்றும் வக்ஃப் வாரிய சொத்துக்களை முறைகேடாக குத்தகைக்கு எடுத்ததன் மூலம் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக எழுந்த புகாரில் இந்த சோதனை நடத்தப்பட்டது என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ