பிரதமர் மோடிக்கு அசாதுதீன் ஓவைசி சவால்.. திப்பு சுல்தானின் உருவப்படத்தை நீக்க முடியுமா?
Owaisi Challenges For PM Modi: கர்நாடகா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி, முடிந்தால், அரசியல் அமைப்பு சட்டத்தில் இருந்து திப்பு சுல்தானின் உருவப்படத்தை நீக்க முடியுமா? என பிரதமர் மோடிக்கு சவால் விடுத்துள்ளார்.
Karnataka Assembly Election 2023: கர்நாடகாவில் தேர்தல் களம் அனலைக் கக்கிக் கொண்டு இருக்கிறது. கர்நாடகா சட்டசபை தேர்தலை அடுத்து, அங்கு தேசிய முதல் உள்ளூர் தலைவர்கள் என தேர்தல் பிரச்சாரத்திற்காக முகாமிட்டு உள்ளனர். அந்த வரிசையில் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தேசிய தலைவர் அசாதுதீன் ஒவைசி, "அரசியலமைப்பு சட்டத்தின் முதல் பிரதியில் திப்பு சுல்தானின் உருவப்படம் உள்ளது. அரசியல் சட்டத்தில் இருந்து திப்பு சுல்தானின் உருவப்படத்தை நீக்க முடியுமா என பிரதமர் மோடிக்கு சவால்" விடுத்துள்ளார். இதற்கு காரணம் கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி செய்த போது, கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் திப்பு சுல்தான் பிறந்த நாளை அரசு விழாவாக அப்போதைய காங்கிரஸ் அரசு கொண்டாடியது. ஆனால் பாஜக அரசு மாநிலத்தில் ஆட்சிக்கு வந்ததை அடுத்து, அதை ரத்து செய்தது. திப்பு சுல்தான் எதிர்ப்பு அரசியலை பாஜக கையில் எடுத்தது. இதனை மேற்கோள்காட்டி பிரதமர் மோடிக்கு அசாதுதீன் ஒவைசி சவால் விடுத்துள்ளார்.
கர்நாடகா தேர்தல்: அசாதுதீன் ஒவைசி பிரசாரம்
கர்நாடகா சட்டசபை தேர்தலையொட்டி, ஏஐஎம்ஐஎம் கட்சி வேட்பாளர்கள் சார்பில் பிரசாரம் செய்வதற்காக ஹூப்ளி வந்த அசாதுதீன் ஒவைசி, தனது கட்சித் தலைவர்களை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசினார். "சட்ட வரம்பிற்கு உட்பட்டு தான் எங்களின் செயல்பாடுகள் இருக்கிறது எனக் கூறும் பாஜக, அரசியல் சட்டத்தில் உள்ள திப்புவின் உருவப்படத்தை நீக்குவார்களா? எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும் படிக்க - நட்சத்திர பிரச்சாரகர்கள் ‘நாவடக்கத்தை’ கடைபிடிக்க வேண்டும்: தேர்தல் ஆணையம்
முஸ்லீம் இட ஒதுக்கீட்டை நீக்குவது சட்டவிரோதமானது:
நாட்டில் ஒரே மாதிரியான குடியுரிமையை அமல்படுத்துவது குறித்தும் பேசிய அவர், பல்வேறு மாநிலங்களில் பாஜக வெவ்வேறு நிலைகளில் உள்ளது. 4% இடஒதுக்கீட்டை நீக்கியது சட்டவிரோதமானது எனத் தெரிவித்தார்.
பஜ்ரங் தள அமைப்பு தடை திட்டம்:
கர்நாடக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பஜ்ரங் தள அமைப்பை தடை செய்யும் திட்டம் குறித்து கருத்து தெரிவித்த அவர், "தேர்தலுக்கு முன் காங்கிரஸ் நிறைய பேசுகிறது. ஆனால் தேர்தலுக்குப் பிறகு ஏதாவது நடக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம். முன்னதாக, அயோத்தியில் பாபர் மசூதியை கட்டுவோம் என்று காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியது. அதன்பிறகு அவர்கள் ஏதாவது செய்தார்களா? எனக் கேள்வி எழுப்பினார். மேலும் தேர்தலுக்கு முன்பு பல வாக்குறுதிகளை மட்டுமே தருகிறது. ஆனால் அவை எதுவும் நிறைவேற்றப்படுவதில்லை என்று காங்கிரஸ் கட்சியை சாடினார்.
காங்கிரஸில் சேர்ந்தால் மதச்சார்பற்றவரா?
முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரின் வாழ்க்கை ஆர்எஸ்எஸ் உடன் தொடங்கியது. அப்படிப்பட்டவர்களை காங்கிரஸ் கட்சியில் சேர்த்துள்ளது. இப்போது அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தவுடன் மதச்சார்பற்றவராக மாறிவிட்டாரா? காங்கிரஸ் கட்சி மதச்சார்பற்றது என்று சான்றளிக்கும் நோட்டரியா? என்று கிண்டலாகப் பேசினார்.
மேலும் படிக்க - “நாங்களும் சளச்சவங்க இல்ல” அசத்தல் வாக்குறுதிகளை அள்ளிவிசிய காங்கிரஸ்
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை:
நேற்று (மே 2, செவ்வாய்க்கிழமை) கர்நாடகா தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் வெளியிட்டது. அதில், பஜ்ரங் தள அமைப்பு, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போன்ற சமூகத்தில் முரண்பாடுகளை விதைக்கும் அமைப்புகளை தடை செய்ய வலுவான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தது.
இஸ்லாமியர்களுக்கு மீண்டும் இடஒதுக்கீடு:
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மூத்த மாநில தலைவர்கள் முன்னிலையில் வெளியிட்டார். மக்கள்தொகை அடிப்படையில் அனைத்து சாதியினருக்கும் இடஒதுக்கீடு வரம்பை 50 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாக உயர்த்துவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் சமூக-பொருளாதார ஜாதிவாரி கணக்கெடுப்பை எடுத்து, அதற்கேற்ப சமூக நீதியை வழங்குவதாகவும் காங்கிரஸ் உறுதியளித்தது. இஸ்லாமியர்களுக்கு மீண்டும் 4 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வரப்படும் எனவும் கூறியுள்ளது.
குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ. 2,000:
கர்நாடகாவில் பொது மற்றும் தனியார் துறைகளில் உள்ளூர் மக்களுக்கு 80 சதவீத வேலைகள் உறுதி செய்யப்படும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ.10 கோடி தொடக்க நிதி வழங்கப்படும் எனவும் உறுதியளித்து உள்ளது. பெண் குடும்பத் தலைவிக்கும் ஒவ்வொரு மாதமும் ரூ. 2,000 வழங்கப்படும். அனைத்துப் பெண்களுக்கும் அரசுக்குச் சொந்தமான KSRTC/BMTC பேருந்துகளில் இலவசப் பயணம் செய்யலாம் மற்றும் அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் என பல திட்டங்களை தனது தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநில சட்டபை தேர்தல் விவரங்கள்:
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு மே 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- கர்நாடக மாநில சட்டபை எண்ணிக்கை: 224
- கர்நாடகவில் ஆட்சி அமைக்க தேவையான இடங்கள்: 113
- கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெறும் நாள்: மே 10
- கர்நாடக தேர்தல் வாக்கு எண்ணிக்கை: மே 13
மேலும் படிக்க - இலவச காஸ் சிலிண்டர்... தினமும் அரை லிட்டர் நந்தினி பால்... பாஜக தேர்தல் அறிக்கை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ