திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தான செயல் அலுவலருக்கு, மத்திய தொல்லியியல் துறை அதிகாரிகள் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில், திருமலையில் உள்ள பழங்கால கட்டடங்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும், கட்டடங்களை தேவஸ்தான அதிகாரிகள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப உடைத்து,  மாற்றங்கள் செய்வதாக புகார் வந்துள்ளதாகவும், கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பக்தர்கள் வழங்கும் விலை மதிப்புமிக்க காணிக்கைகள் உரிய பாதுகாப்புடன் வைக்கப்படவில்லை என்றும்,  பழங்காலத்தில் மன்னர்கள், பேரரசர்கள் வழங்கிய ஆபரணங்கள் கூட பாதுகாப்பாக இல்லை என, மத்திய தொல்லியியல் துறைக்கு புகார்கள் வந்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


எனவே, திருமலை தேவஸ்தானத்தின் கீழ் உள்ள கோயில் கட்டடங்களின் விவரங்களை வழங்கும்படி, தொல்லியியல் துறை அதிகாரிகள் தேவஸ்தானத்தை வலியுறுத்தியுள்ளனர். இதனை அடுத்து, கோவிலை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் எடுக்க முயன்று வருவதாக தகவல்கள் பரவின.


இதற்கு ஆந்திர மாநில அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய பாஜக எம்.பி நரசிம்ம ராவ், “கோவிலை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்கவில்லை. கோவில் கட்டிட விபரங்களை கேட்டுள்ளது. அதை மாநில அரசு அளிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.  இதற்கிடையே, சர்ச்சைக்குரிய இந்த கடிதத்தை தொல்லியல்துறை திரும்பப் பெற்றுக்கொண்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.