அசாம் மாநிலம் கோக்ரஜார் நகரில் பயங்கரவாதிகள் மார்க்கெட்டில் நேற்று மதியம் ஒரு ஆட்டோவில் வந்த பயங்கரவாதிகள் 3 பேர் அங்கு கூடி இருந்தவர்களை நோக்கி கையெறி குண்டுகளை வீசியபடி, துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டனர். இந்த திடீர் தாக்குதலில் நிலைகுலந்த மக்கள், சிதறி ஓடினர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சம்பவம் பற்றிய தகவல் கிடைத்ததும், அந்த பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர் விரைந்து வந்தனர். அதற்குள் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் பலி ஆனார்கள். மேலும் 30-க்கும் அதிகமான பேர் காயம் அடைந்தனர்.


காயம் அடைந்தவர்களை பாதுகாப்பு படையினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் 2 பேர் உயிர் இழந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. பாதுகாப்பு படையினரின் பதிலடி தாக்குதலில் ஒரு பயங்கரவாதி குண்டு பாய்ந்து இறந்தான். மற்ற இரு பயங்கரவாதிகளும் தப்பி ஓடிவிட்டதாக தெரிகிறது. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி என்ற இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்  இந்த தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது.


இந்த நிலையில், தாக்குதல் நடத்திய பயங்கரவாதி ஒருவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. நீல நிற சட்டை அணிந்து கொண்டு மிகவும் சாதரணமாக எந்த பதட்டமும் இன்றி மார்க்கெட்டுக்குள் பயங்கரவாதி நடமாடும் புகைப்படங்களும் வெளியாகி இருக்கிறது. முதுகில் ஒரு கருப்பு நிற பையையும் அணிந்து செல்போனை பயன்படுத்திக்கொண்டு சென்று கொண்டிருக்கிறான். பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி இவன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.