சட்டமன்ற தேர்தல் பஞ்சாப்: காங்கிரஸ் வெற்றி பெரும் - நவ்ஜோத் சிங்
பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தல் வெற்றியை ராகுல் காந்திக்கு பரிசாக அளிப்பேன் என முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார்.
117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் சிரோமணி அகாலிதளம், பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளாக தொடர்ந்து இக்கூட்டணியே ஆட்சி செய்து வருகிறது. மேலும் களத்தில் காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி கட்சிகளும் உள்ளன. இந்த சட்டமன்ற தேர்தலில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.மொத்தமுள்ள 117 தொகுதி களில் 1,145 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆளும் கூட்டணியில் சிரோமணி அகாலி தளம் 94 இடங்களிலும் பாஜக 23 இடங்களிலும் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் கட்சி 117 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. ஆம் ஆத்மி கட்சி 112 இடங்களில் போட்டியிடுகிறது.
சமீபத்தில் பாஜக கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார் முன்னாள் கிரிக்கெட் வீரரான சித்து. இந்நிலையில் இன்று காலை அமிர்தசரஸில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க தனது மனைவி நவ்ஜோத் கவுருடன் சித்து வந்திருந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,”ராகுல் காந்திக்கு கூடிய விரைவில் சிறந்த பரிசை அளிப்பேன்.” மேலும் இந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தான் வெற்றி பெரும் என தெரிவித்தார். பஞ்சாபில் காலை முதல் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டளித்து வருகின்றனர்.