மும்பை மலாட் விபத்தில் பலியானவர் குடும்பத்திற்கு ₹5 லட்சம் அறிவிப்பு!
மும்பையின் கிழக்கு மலாட் பகுதியில் சுற்றுச்சுவர் இடிந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
மும்பையின் கிழக்கு மலாட் பகுதியில் சுற்றுச்சுவர் இடிந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
கடந்த 4 நாட்களாக மகராஷ்டிர மாநிலத்தில் விடாது பெய்து வரும் மழையின் காரணமாக மும்பையின் கிழக்கு மலாட் பகுதியில் உள்ள பிம்ப்ரிபடா என்ற இடத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், இதுவரை 12 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 13 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். கட்டிட இடிபாடுகளுக்குள் இன்னும் சிலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுவதால், தொடர்ந்து மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
மகாராட்டிர மானிலத்தில் பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் பெய்து வரும் கனமழை தொடர்ந்து நேற்று 4-வது நாளாக நீடித்தது. இரவிலும், பகலிலும் நாள் முழுவதும் மழை பெய்து கொண்டே இருந்தது.
மும்பை, தானே, பால்கர் மாவட்டங்களில் இடைவிடாமல் கொட்டி வரும் மழை மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்டு உள்ளது. இந்த பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. சாலைகள், தெருக்களிலும் மழைவெள்ளம் தேங்கி உள்ளது.
விடாமல் பொழிந்து வரும் கனமழையால் நகர பகுதிகள் மற்றும் கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. இதன் காரணமாக மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.ரெயில் நிலையங்களையும் வெள்ளம் சூழ்ந்தது. மாட்டுங்கா, சயான், கல்வா, தானே, நாலச்சோப்ரா, பால்கர் ரெயில் நிலையங்களில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இந்நிலையில் மலாட் பகுதி விபத்து குறித்து தகவல் அறிந்து தான் மிகுந்த வேதனை அடைந்ததாகவும், விபத்தில் பலியானவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்வதாகவும் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். மேலும் விபத்தில் பலியானவர் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.