மகாராஷ்டிர அரசியலில் நிகழ்ந்து வந்த அடுத்தடுத்த திருப்பங்கள் இன்று நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. அம்மாநிலத்தின் முதலமைச்சராக பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் ட்விஸ்டாக அதிருப்தி சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பார் என தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார். இதன் மூலம் மகாராஷ்டிராவின் 20-வது முதலமைச்சராகிறார் ஏக்நாத் ஷிண்டே. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

யார் இந்த ஏக்நாத் ஷிண்டே?


மகாராஷ்டிராவில் உள்ள சத்தாரா எனும் பகுதியில் 1964 பிப்ரவரி மாதம் 9-ம் தேதி பிறந்தவர் ஏக்நாத் ஷிண்டே. பதினொன்றாம் வகுப்பு வரை படித்த அவர் வறுமை காரணமாக மேற்கொண்டு படிக்க முடியாமல் சிறு வயதிலேயே வேலைக்கு செல்ல தொடங்கினார். 


ஆரம்பத்தில் கூலித்தொழிலாளியாக வாழ்க்கையை தொடங்கிய இவர் சில ஆண்டுகளில் சேமித்த பணத்தில் ஆட்டோ ஒன்றை சொந்தமாக வாங்கினார். ஆண்டுகள் உருண்டோடிய நிலையில் 80-களில் பால்தாக்கரேவின் பேச்சுக்களால் ஈர்க்கப்பட்டு சிவசேனா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். 



அதுமுதல் சிவசேனா சார்பில் நடைபெறும் போராட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்ள தொடங்கினார். தானே பகுதியில் சிவசேனாவின் கொள்கைகளை பரப்பி கட்சியின் வளர்ச்சிக்கும் அடிகோலியதால் பால்தாக்ரேவின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார் ஷிண்டே. அது முதல் தானே பகுதி மக்களிடம் இவரது செல்வாக்கு உச்சம் தொட ஆரம்பித்தது. 


கவுன்சிலராக தேர்வு:


தனது அரசியல் பயணத்தில் முதன்முறையாக 1997-ல் நடந்த தானே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டார். அடுத்த 7 ஆண்டுகளில் தானே தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார். அதற்கு அடுத்த ஆண்டே தானே மாவட்ட சிவசேனா தலைவர் பதவி அவரை தேடிவந்தது. 


மேலும் படிக்க | மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பார்!


தொடர் சட்டமன்ற வெற்றிகள்:


2009, 2014, 2019 என அடுத்தடுத்து வந்த சட்டப்பேரவை தேர்தல்களில் போட்டியிட்டு தொடர் வெற்றிகளை குவித்தார். 2014-ம் ஆண்டு சிவசேனாவின் சட்டப்பேரவை கொறடாவாக தேர்வுசெய்யப்பட்ட இவர் எதிர்க்கட்சி தலைவராகவும் பதவி வகித்தார். அடுத்த ஒரு மாதத்தில் பாஜக - சிவசேனா கூட்டணி ஏற்பட்டதால் அமைச்சரானார் ஷிண்டே. அவருக்கு பொதுப்பணித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. 



2019-ம் ஆண்டு பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டாலும் யார் முதலமைச்சராவது எனும் தகராறில் அந்த கூட்டணி முறிந்தது. இதன்பிறகு காங்கிரஸ், சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மகா விகாஸ் அகாடி எனும் கூட்டணியை முன்னெடுத்தது. கட்சித்தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பதவியேற்க மீண்டும் ஏக்நாத் ஷிண்டே பொதுப்பணித்துறை அமைச்சரானார். ஆனால், இதே அரசில் விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக பதவியேற்ற உத்தவ் தாக்ரேவின் மகன் ஆதித்யா தாக்ரேவால் ஷிண்டே அதிருப்தியடைந்தார். உத்தவ் தாக்ரேக்கு அடுத்ததாக கட்சியில் ஆதித்யா தாக்கரே முன்னிலைப்படுத்தப்பட்டதால் தான் ஓரங்கப்படுவதாக நினைத்தார் ஏக்நாத் ஷிண்டே. 


மகாராஷ்டிராவின் 20-வது முதலமைச்சர்:


முதுகு தண்டுவடத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக முதலமைச்சராக இருந்தாலும் கட்சி தொண்டர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களை சந்திப்பதை உத்தவ் தாக்கரே தவிர்த்து வந்தார். இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக்கொண்ட ஏக்நாத் ஷிண்டே கட்சியிலும் எம்.எல்.ஏக்களிடத்திலும் தனக்கான செல்வாக்கை நிலை நிறுத்தினார். இந்த நிலையில் தான் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தி கிட்டத்தட்ட முக்கால் வாசி சிவசேனா எம்.எல்.ஏக்களுடன் அசாமில் முகாமிட்டு மகாராஷ்டிரா அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். அதோடு ஆட்சியமைப்பது தொடர்பாக பாஜகவினருடனும் தொடர் பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தார். 



இந்த நிலையில் மகாராஷ்டிராவின் அடுத்த முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் ஏக்நாத் ஷிண்டே. குடும்ப வறுமை காரணமாக படிப்பை நிறுத்திவிட்டு சாதாரண ஆட்டோ ஓட்டுநராக வாழ்க்கையை தொடங்கிய ஷிண்டே இந்தியாவின் வர்த்தக தலைநகரம் என்றழைக்கப்படும் மும்பையை உள்ளடக்கிய மகாராஷ்டிராவின் அரியணையை வசமாக்கியுள்ளார். கட்சியின் கடைமட்ட தொண்டரில் இருந்து உயர்மட்ட தலைவர்கள் வரை நன்றாக பழக்கூடிய ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு பால்தாக்ரேவின் கனவுகளை நிறைவேற்ற பாடுபடும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். 


மேலும் படிக்க | மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ராஜினாமா


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYe