பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோரிடம் மீண்டும் விசாரணை நடத்த கோர்ட் உத்தரவிட்டிருந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் அமைந்திருந்த 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாபர் மசூதி, கடந்த 1992-ம் ஆண்டு கரசேவகர்களால் இடிக்கப்பட்டது.


இந்திய வரலாற்றுப் பக்கத்தில் நீங்காத கறையை ஏற்படுத்தியது இச்சம்பவம். இதில், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்பட பலருக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.


சுமார் 25 ஆண்டுகளாக இதுதொடர்பான வழக்கு பல்வேறு நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், சுப்ரீம் கோர்ட் அண்மையில் உத்தரவைப் பிறப்பித்தது. 


அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, வினய் கட்டியார், விஷ்ணு ஹரி டால்மியா, சாத்வி ரிதம்பரா உள்ளிட்டோரிடம் மறு விசாரணை நடத்த வேண்டும் என்றும், வழக்கை தினசரி அடிப்படையில் விசாரித்து 2 ஆண்டுகளில் முடித்து வைக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் சுப்ரீம் கோர்ட் குறிப்பிட்டிருந்தது.


அதன்படி, பாபர் மசூதி இடிப்பு வழக்கை, லக்னெளவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம், இந்த கடந்த மாதம் 20-ம் தேதி முதல் விசாரித்து வந்தது.


இந்நிலையில் கட்சி பணி, அரசு பணி, வயது மூப்பு உள்ளிட்ட காரணங்களால் விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோர் மனுதாக்கல் செய்திருந்தனர்.


இந்த மனுவை இன்று விசாரித்த சிபிஐ சிறப்பு கோர்ட் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோருக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்துள்ளது.