மத்திய பெங்களூரு மக்களவை தொகுதியில் போட்டியிடும் நடிகர் பிரகாஷ் ராஜ் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்ததாக வெளியாகும் தகவல்களுக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடாகவின் பெங்களூரு (மத்திய) மக்களவை தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட நடிகர் பிரகாஷ் ராஜ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், அதே தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரிஸ்வான் அர்ஷத் என்பவருடன் பிரகாஷ் ராஜ் கைகுலுக்கும் புகைப்படம் ஒன்று வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.



இதனையடுத்து ‘பிரகாஷ் ராஜ் காங்கிரசில் சேர்ந்து விட்டார். அவருக்கு ஓட்டுபோட்டு உங்களது வாக்குகளை வீணாக்க வேண்டாம்’ என்ற அறிவிப்புடன் வெளியான இந்த புகைப்படம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.


இந்நிலையில்,  தற்போது இந்த புகைப்படம் குறித்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பிரகாஷ் ராஜ் விளக்கம் ஒன்று அளித்துள்ளார்.



வாட்ஸ்அப்பில் பரவி வந்த புகைப்படம் ஆனது காங்கிரஸ் வேட்பாளர் ரிஸ்வான் அர்ஷத்-தின் நேர்முக உதவியாளரின் அரசியல் தந்திரம் மூலம் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக பிரகாஷ் ராஜ் இன்று தெரிவித்துள்ளார்.


முன்னர், வேட்பாளர்களுக்கு இடையிலான ஒரு விவாதமேடை நிகழ்ச்சியின்போது தன்னுடன் கலந்துகொண்ட  காங்கிரஸ் வேட்பாளர் ரிஸ்வான் அர்ஷத்துக்கு மரியாதை நிமித்தமாக தான் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்ததாகவும், அந்த புகைப்படத்தை வைத்து அவரது உதவியாளர் செய்துள்ள இந்த அரசியல் சித்து விளையாட்டு தொடர்பாக நான் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருக்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.