வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினாவிற்கு சிறப்பான வரவேற்பு
வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா நான்கு நாள் அரசு பயணமாக நேற்று இந்தியா வந்துள்ளார். ஏழாண்டுகளுக்கு பின்னர் இந்தியாவுக்கு வருகைதரும் வங்காளதேச நாட்டின் பிரதமர் என்பதால் அவரை சிறப்பான முறையில் வரவேற்க பிரதமர் நரேந்திர மோடி தீர்மானித்தார்.
இதையடுத்து நேற்று காலை பிரதமர் மோடி தனது காரில் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்துக்கு புறப்பட்டு சென்றார். அங்கு விமானத்தில் இருந்து இறங்கிவந்த ஷேக் ஹசினாவுக்கு மலர் கொத்து அளித்து பிரதமர் மோடி அன்புடன் வரவேற்றார்.
இந்நிலையில், டெல்லி ரெய்சினா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று காலை முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையுடன் ஷேக் ஹசினாவுக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய மந்திரிகள் சிலர் கலந்து கொண்டனர்.
இந்த வரவேற்பை ஏற்றுகொண்ட ஷேக் ஹசினா, டெல்லி ராஜ்கட் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்றார். காந்தி சமாதியின்மீது அவர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா-பிரதமர் மோடி இடையில் நடைபெறவுள்ள பல்வேறு சுற்று பேச்சுவார்த்தையில் இருநாடுகளுக்கும் இடையில் சில முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, வங்காளதேசத்துக்கு 50 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ராணுவ தளவாடங்களை இந்தியா வழங்கவுள்ள ஒப்பந்தம் இரு நாடுகளுக்கிடையிலான நல்லுறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.