ஆசிரியர் அவதாரம் எடுத்த காவலர்: கல்விக் கடவுளாய் மாறிய Bengaluru Cop!!
COVID -19 தொற்றுநோய் காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் சிலரது படிப்பு பாதிக்கப்படாமல் இருப்பதை பெங்களூருவில் ஒரு துணை ஆய்வாளர் உறுதி செய்துள்ளார்.
COVID -19 தொற்றுநோய் காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் சிலரது படிப்பு பாதிக்கப்படாமல் இருப்பதை பெங்களூருவில் ஒரு துணை ஆய்வாளர் (Sub-Inspector) உறுதி செய்துள்ளார். இந்த போலீஸ் அதிகாரி ஒரு ஆசிரியரின் பங்கை ஏற்றுள்ளார்.
ஷாந்தப்பா ஜடேமன்னாவர் (Shanthappa Jademmanavr) என்ற இந்த போலீஸ் அதிகாரி, தினமும், தனது பணிக்கு செல்வதற்கு முன்னர் அன்னபூர்ணேஸ்வரி நகரில் உள்ள ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கிறார். தினமும் காலை 7 மணிக்கு, வேலைக்குச் செல்வதற்கு முன்பு, சுமார் 30 குழந்தைகளுக்கு புலம்பெயர்ந்தோர் (Migrant Labourers) குடியேற்றத்தில் ஒரு மணி நேரம் இவர் கற்பிக்கிறார்.
அவர் முக்கியமாக குழந்தைகளுக்கு வாழ்க்கைத் திறன், பொது அறிவு மற்றும் வேத கணிதம் (Vedic Maths) போன்றவற்றைக் கற்பிக்கிறார்.
“புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் கல்விக்கான உரிமை உண்டு. அவர்களால் பள்ளிக்கும் செல்ல முடியாது, ஆன்லைன் கல்விக்கான அணுகலும் அவர்களுக்கு இல்லை. ஆனால் இதில் அவர்களது தவறு என்ன இருக்கிறது? இந்த குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் இணைந்து உழைப்பதை நான் விரும்பவில்லை, இவர்கள் கல்வி கற்க வேண்டும். அதுதான் எனக்கு முன்னுரிமை” என்று சப்-இன்ஸ்பெக்டர் ANI இடம் கூறினார்.
ALSO READ: இப்படியும் சில மனிதர்கள்: பறவைக்காக இருளைத் தழுவிக் கொண்ட அற்புத கிராமம்!!
20 நாட்களாக அவர்களுக்கு கற்பித்து வருவதாக சாந்தப்பா கூறினார்.
“இந்த குடியேற்றத்திலும் பெங்களூரிலும் (Bengaluru) குடியேறிய பெரும்பாலான தொழிலாளர்கள் வடக்கு கர்நாடக மாவட்டங்களான பல்லாரி, கொப்பல், ராய்ச்சூர் மற்றும் கடாக் போன்ற இடங்களைச் சேர்ந்தவர்கள். நானும் அதே பிராந்தியத்தைச் சேர்ந்தவன் என்பதால் இந்த தொழிலாளர்களின் நிலைமைகள் எனக்குத் தெரியும். என் மாமா பத்து வருடங்கள் கூலித் தொழிலாளியாக இருந்தார். இது போன்ற ஒரு குடிசையில் வசித்து வந்தார். இந்த சூழல்களை நான் நன்றாகப் பார்த்துள்ளேன். எனவே குழந்தைகளின் கல்விக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்ய முடிவு செய்தேன்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இருப்பினும், இந்த பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு, அவர் தனது குழந்தைகளுக்கு கற்பிக்க அனுமதிக்கும்படி அவர்களது பெற்றோரை சமாதானப்படுத்த வேண்டியிருந்தது.
காவலரின் முன்முயற்சியைப் பாராட்டிய கர்நாடகாவின் கல்வி அமைச்சர் (Education Minister of Karnataka) எஸ்.சுரேஷ்குமார், “நான் இந்த காவல்துறை அதிகாரியைப் பற்றி பெருமைப்படுகிறேன். போலீஸ் அதிகாரிகள் தவறான காரணங்களுக்காக பிரபலமாகும் வேளையில், இந்த மாதிரியான உதாரணம் காவல் துறையின் பெருமையை அதிகரிக்கிறது.” என்று கூறினார்.
ALSO READ: மனிதன் என்பவன் தெய்வமாகலாம்: கொரோனா காலத்து கொடை வள்ளல்கள்!!